உ.பி.யில் போக்சோ வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
உ.பி.யில் போக்சோ வழக்கு ஒன்றில் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா கடந்த 17-ம் பிறப்பித்த உத்தரவில், “சிறுமியை ஒரு பாலத்தின் கீழ் இழுத்துச் செல்லும்போது, மார்பகங்களைப் பிடித்து, பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது, பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுக்கு போதுமானது அல்ல” என்றார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு சிவசேனா (உத்தவ்) கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி எழுதியுள்ள கடிதத்தில், “இது ஒரு குறைபாடுள்ள தீர்ப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிரான 51 குற்றங்கள் நடக்கும்போது, பெண்கள் பாதுகாப்பில் நமது நீதித்துறையின் அக்கறையின்மை அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்தை தவறாக வழிநடத்தும் இத்தீர்ப்புக்காக நீதிபதியை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே கூறுகையில், “இது மோசமான உத்தரவு, இதனை ஏற்க முடியாது. நீதிமன்றங்கள் இவ்வாறு தீர்ப்பளித்தால் பெண்களும் குழந்தைகளும் துன்புறுத்தப்படும்போது வேறு எங்கு சென்று முறையிடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த உத்தரவு பாஜக அரசால் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான மனநிலை திணிக்கப்படுவதை காட்டுகிறது என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் விமர்சித்துள்ளார்.