பெங்களூரு,
கர்நாடகம் மாநிலத்துக்கு உட்பட்டது பெலகாவி மாவட்டம். இந்த மாவட்டம், கர்நாடகம்-மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனால் பெலகாவியை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கிடையில், கடந்த மாதம்(பிப்ரவரி) 21-ந்தேதி பெலகாவியில் அரசு பஸ் கண்டக்டர் மராத்தியில் பேச மறுத்ததால், அவர் மீது மராட்டிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள். இது 2 மாநிலங்களுக்கும் இடையே மொழி பிரச்சினையாக மாறியதால், பெலகாவியில் மராட்டிய பஸ்கள் மீதும், மராட்டியத்தில் கர்நாடக பஸ்கள் மீதும் கற்கள் வீசப்பட்டது. பின்னர் அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய மராட்டிய அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கன்னட அமைப்பினர் வலியுறுத்தினார்கள்.
குறிப்பாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், கண்டக்டர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மார்ச் 22-ந் தேதி (அதாவது நேற்று) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். மராட்டிய ஏகிகிரண் சமிதி(எம்.இ.எஸ்.) அமைப்புக்கு கர்நாடகத்தில் தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி முழு அடைப்பு நேற்று நடந்தது. ஆனால் முழு அடைப்புக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது. தொழிற்சாலை, பிற நிறுவனங்கள் எப்போதும் போல் திறக்கப்பட்டு இருந்தது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், காய்கறி மார்க்கெட்டுகள், வணிகவளாகங்கள் திறந்திருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.