மதுரை: மேலூர் கல்லாங்காடு பகுதியில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தவேண்டும் என, 18 கிராம மங்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லங்காட்டில் தமிழ்நாடு அரசு சார்பில், 279 ஏக்கரில் சிப்காட் திட்டத்திற்கு எதிராக வஞ்சிநகரம், பூதமங்கலம் கொடுக்கப்பட்டி ஊராட்சிகளைச் சேர்ந்த நாகப்பன் சிவல்பட்டி, நெல்லுக்குண்டுப்பட்டி, கம்பாளிப்பட்டி, மூவன்சிவல் பட்டி, உசிலம்பட்டி, கண்டுவப்பட்டி, தாயம்பட்டி, ஒத்தப்பட்டி , முரவக்கிழவன்பட்டி, சொக்கக்கிழவன்பட்டி, முத்தம்பட்டி, பூதமங்கம், மணியம்பட்டி, நாட்டார்மங்கலம், பெரிய சிவல்பட்டி, தேத்தாம்பட்டி, மாங்குளப்பட்டி, நல்ல சுக்காம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, மம்மானிப்பட்டி, பொட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிப்காட் அமைக்கவிருக்கும் பகுதியிலுள்ள அழகு நாச்சியம்மன் கோவில் அருகே இன்று திண்டனர். அவர்கள் சிப்காட் தொழிற் பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘சிப்காட் முயற்சியை கைவிடவேண்டும். கீழடி சிவகளை, வெம்பக்கோட்டையை போன்று கல்லங்காடு சுற்றுவட்டார வரலாற்று உண்மைகளை வெளியுலகத்திற்கு தெரிவிக்க தொல்லியல் ஆய்வு நடத்தவேண்டும். பழமையான பாண்டிய கால அகளங்கீஸ்வரர் சிவன் ஆலயம், அழகு நாச்சியம்மன், பெருங்காட்டு கருப்பு உள்ளிட்ட கோயில்கள், நந்தி, கல்வெட்டுக்கள், பெருங்கற்கால சின்னங்கள், செந்நிற பானை ஓடுகள், இரும்பு உருக்கு தொழில் நடந்த இடங்கள், கோயில் காடுகள் என, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கீழடி, அரிட்டாப்பட்டிக்கு இணையாக கல்லங்காடு பகுதியை பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மரபுத்தலமாக அறிவிக்கவேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தலைமை ஆசிரியர் உடையப்பன், பூதமங்கலம் முருகேசன், நாகப்பன்சிவல்பட்டி பாலுச்சாமி, சிங்கம்புணரி ஜோதி, புரண்டிப்பட்டி துரைச்சாமி மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன், கள்ளிமந்தயம் சிப்காட் போராட்டக்குழு ராமகிருஷ்ணன், நேர்மை மக்கள் இயக்கம் ரகுபதி, பெண்கள் எழுச்சி இயக்கம் மகாலட்சுமி, தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு ராஜீவ்காந்தி, டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கம்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.