திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் 2020-ல் மரணமடைந்துவிட, கடந்த 2024-ல் மறுமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் மகப்பேறு விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், திருமணம் நடந்ததற்கான ஆதாரம் இல்லை. கர்ப்பமான பின்பே மறுமணம் செய்துள்ளார், என்று மகப்பேறு விடுப்பு விண்ணப்பத்தை நடுவர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். பெண் உதவியாளர் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தன் கணவர் இறந்த பின்பு மனுதாரர், ஆண் நண்பருடன் லிவ் இன் உறவு முறையில் வாழ்ந்துள்ளார். திருமணம் செய்துகொள்ள ஆண் நண்பர் உறுதி அளித்ததால், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் திருமணத்துக்கு முன் கருவுற்றார்.

ஆனால், ஆண் நண்பர் மனுதாரரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதுகுறித்து புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்ய, அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற ஆண் நண்பரிடம் தெரிந்தவர்கள் அறிவுரை கூறியதைத் தொடர்ந்து மனுதாரரை திருமணம் செய்துள்ளார். இதற்கான திருமண அழைப்பிதழ், திருமண புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
திருமணம் செய்துகொள்ளாமல் தம்பதியராக வாழும் ‘லிவ் இன்’ முறையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அப்படியுள்ள சூழலில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பழமைவாத சிந்தனையுடன் மனிதத்தன்மையற்ற முறையில் செயல்பட்டுள்ளார்.
திருமணத்தை பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. நீதித்துறையை சேர்ந்தவர்கள் தங்களை சீர்திருத்தி செயல்பட வேண்டும். மனுதாரர் விஷயத்தில் நீதிபதியின் நடவடிக்கை தேவையற்றது.

எனவே விடுப்பு வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண் உதவியாளர் விடுப்பு எடுத்திருந்தால் அதை மகப்பேறு விடுப்பாக கணக்கிட்டு விடுப்பு காலத்திற்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். விடுப்பு வழங்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் அனுப்ப உத்தரவிடுகிறோம். இனி இதுபோன்ற இரக்கமற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமல் இருக்க அனைத்து நீதித்துறை அதிகாரிளுக்கும் இந்த உத்தரவை அனுப்பி வைக்கவும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
