பெய்ரூட்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்துள்ளது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.
ஓராண்டுக்கு மேலாக நடந்த இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது. இஸ்ரேலை தாக்கியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புடன் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தி அது அமலில் உள்ள சூழலில், நேற்று திடீரென இஸ்ரேல் மீது லெபனான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 2-வது முறையாக லெபனானில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது, இஸ்ரேலுக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. லெபனானில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தும்படி ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், லெபனானில் இருந்து நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.
ஹிஸ்புல்லாவுடன் கூட்டணியில் உள்ள ஹமாஸ் அமைப்புடனான தனியான போர்நிறுத்த ஒப்பந்தம் கைவிடப்பட்ட சூழலில், லெபனான் மீது இஸ்ரேல் இந்த பதிலடியை கொடுத்துள்ளது. இஸ்ரேலின் பரம எதிரியான ஈரான் இந்த இரு அமைப்புகளுக்கும் ஆதரவளித்து வருகிறது. லெபனானில் ஏற்கெனவே நடந்த தாக்குதல்களில் இதுவரை 4 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.