புதுடெல்லி: முன்மொழியப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) அறிவித்துள்ளது.
இது குறித்து ஏஐஎம்பிஎல்பி-யின் அலுவலகச் செயலாளர் முஹ்த் வக்கர் உத்தின் லத்திஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 17-ம் தேதி டெல்லியில் நடந்த மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான போராட்டத்தைத் தொடர்ந்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், முன்மொழியப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டத்தை அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய, பாரபட்சமான மற்றும் சேதம் விளைவிக்கக் கூடிய அந்த மசோதாவை எதிர்க்க அனைத்து அரசியலமைப்பு, சட்ட மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஏற்றுக்கொள்வது என்று ஏஐஎம்பிஎல்பி-யின் 31 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தின் முதல்கட்டமாக அதன் ஒரு பகுதியாக மார்ச் 26-ம் தேதி பாட்னாவிலும், 29-ம் தேதி விஜயவாடாவிலும் மாநில சட்டப்பேரவை முன்பு பெரிய அளவிலான போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏஐஎம்பிஎல்பி-யின் மூத்த தலைவர்களுடன் தேசிய மற்றும் மாநில அளவிலான மதம் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். சிவில் சமூக தலைவர்கள், பிற சிறுபான்மையின சமூக தலைவர்கள் மற்றும் தலித், ஆதிவாசி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் முக்கியத் தலைவர்கள் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டு நாடாளுமன்ற குழுவினைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாட்னா போராட்டத்துக்கு, பிஹார் முதல்வர் உட்பட ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாரியம், நாடு தழுவிய அளவில் போராட்டத்துக்கான திட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி, மாநில தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, மலலேர்கோட்லா (பஞ்சாப்) மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் மிகப்பெரிய பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்ட பிரச்சாரங்களில் உள்ளிருப்பு போராட்டங்கள், மனித சங்கிலி, சமூக ஊடக பிரச்சாரம் குறிப்பாக எக்ஸ் தளத்தில் ஹேஸ் டேக் உருவாக்கம் உள்ளிட்டவை அடங்கும்.
அதேபோல் மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தர்ணாக்கள் ஒருங்கிணைக்கப்படும். அதேநேரத்தில் மாவட்ட நீதிபதிகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அளிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.