வாஷிங்டன் டி.சி.,
விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) குறுகிய கால பரிசோதனை மேற்கொள்ள நாசா திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேர்ரி புட்ச் வில்மோர் ஆகிய 2 விஞ்ஞானிகளும் சென்றனர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி 8 நாட்கள் பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்களுடைய பயணம், விண்கல தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது. இதனால், பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற டிரம்ப் அரசின் முயற்சியால், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ராக்கெட் ஒன்றை அனுப்பியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று கடந்த 15-ந்தேதி அதிகாலை புறப்பட்டு சென்றது. இதன்பின்னர், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக புளோரிடா கடல் பகுதியில் தரையிறங்க செய்யப்பட்டனர். அவர்கள் பூமியில் இயல்பு நிலைக்கு வருவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம், விண்வெளி வீரர்களின் கூடுதல் சம்பளம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். புட்ச் மற்றும் சுனிதா என இருவரும் 8-நாள் திட்டத்திற்கு பதிலாக, கூடுதலாக 278 நாட்கள் விண்வெளியில் பணியாற்றி உள்ளனர்.
அவர்கள் கூடுதலாக பணியாற்றியதற்கு ஈடாக, ஒரு நாளைக்கு தலா 5 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில், மொத்தம் 1,430 அமெரிக்க டாலர் (ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 980) கூடுதலாக சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது என பாக்ஸ் நியூஸ் நிருபர் ஒருவர் டிரம்ப்பிடம் கூறினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், இதுபற்றி என்னிடம் ஒருவரும் எதுவும் கூறவில்லை. அவர்களுக்கு கூடுதல் தொகையை நான் கொடுக்க வேண்டியிருந்தால், அதனை என்னுடைய சொந்த பணத்தில் இருந்து எடுத்து கொடுப்பேன் என கூறினார்.
இதேபோன்று, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அரசின் செயல்திறன் துறையின் தலைவரான (டி.ஓ.ஜி.இ.) எலான் மஸ்க்கிற்கும் டிரம்ப் நன்றி தெரிவித்து கொண்டார். நமக்கு அவர் இல்லை என்றால்?, எலான் இல்லையென்றால். நீண்டகாலம் வீரர்கள் விண்வெளியிலேயே இருந்திருப்பார்கள். அவர்களை மீட்டு கொண்டு வர வேறு யார் உள்ளனர்? என கேட்டு எலானுக்கு டிரம்ப் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.
2 விஞ்ஞானிகளும் ஜி.எஸ்.-15 சம்பள பிரிவில் வருபவர்கள். இந்த உயர் வகை பிரிவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை (12 லட்சத்து 5 ஆயிரத்து 133 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 62 ஆயிரத்து 672 அமெரிக்க டாலர் வரை) இருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருந்த இருவருக்கும் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை (93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை) சம்பளம் கிடைக்க பெறும்.
கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை (94 ஆயிரத்து 998 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 152 அமெரிக்க டாலர் வரை) இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.