சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அசத்தியிருந்தார். மும்பை அணி தோற்றிருந்தாலும் அந்த அணி சார்பில் விக்னேஷ் புத்தூர் எனும் இளம் அறிமுக பௌலர் மிகச்சிறப்பாக வீசியிருந்தார். இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் வெற்றி குறித்து சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், “நான் அவுட் ஆன பிறகு எங்கள் அணியின்மீது கொஞ்சம் அழுத்தம் கூடியது. ஒரு சில போட்டிகள் இப்படித்தான் கடைசி வரை நெருக்கமாகச் செல்லும். அப்படியொரு போட்டியை இன்று வென்றதில் மகிழ்ச்சி. அணியின் நலனைக் கருத்தில் கொண்டுதான் நம்பர் 3 இல் பேட்டிங் ஆடுகிறேன். இந்த ஆர்டர்தான் எங்கள் அணிக்கு சமநிலையைக் கொடுக்கிறது. ஓப்பனிங்கில் ராகுல் திரிபாதியாலும் அதிரடியாக ஆட முடியும். என்னாலும் நம்பர் 3 இல் சிறப்பாக ஆட முடியும்.
எங்களின் ஸ்பின்னர்கள் இன்று சரியான லைன் & லெந்தில் வீசியிருந்தனர். ஏலம் முடிந்ததிலிருந்தே மூன்று ஸ்பின்னர்களும் சேப்பாக்கத்தில் வீசுவதைக் காண ஆவலாக இருந்தோம். கலீல் அஹமது கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் அனுபவமிக்க வீரர். நூர் அஹமதுவும் அதீத திறமைமிக்க பௌலர். அதனால் அவர் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும் என நினைத்தோம். தோனி கடந்த சீசனை விட இந்த சீசனில் இன்னும் ஃபிட்டாகவும் இளமையாகவும் மாறியிருக்கிறார்.” என்றார்.