Vijay: “விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?'' – சாடும் விஜய்

அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் `ஜாக்டோ ஜியோ’ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம்
ஜாக்டோ ஜியோ போராட்டம்

அந்த அறிக்கையில், “தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள். விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர்.” எனவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள். ஊர்ப்புற நூலகர்கள். கணினி உதவியாளர்கள்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் - விஜய்யின் அறிக்கை
ஜாக்டோ ஜியோ போராட்டம் – விஜய்யின் அறிக்கை

சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க. அரசு ஏமாற்றி உள்ளது.

எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள். விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க. அரசுக்கு, இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஜாக்டோ ஜியோ போராட்டம் - விஜய்யின் அறிக்கை
ஜாக்டோ ஜியோ போராட்டம் – விஜய்யின் அறிக்கை

இதுபோன்ற பாராமுகச்செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.