அணைக்கட்டுகள் முதல் கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் வரை: தமிழக நீர்வளத் துறையின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்; 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722.55 கோடியில் மேற்கொள்ளப்படும்’ உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்திருந்தனர்.

பேரவையில் இன்று (மார்ச் 24) நீர் வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து, இத்துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நீர்வளத்துறை:

> சென்னையில் நீர்வளத்துறைக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கூடுதல் அலுவலகக் கட்டடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

> முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரைச் சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் ரூ. 374.95 கோடியில் தடுப்பணைகள் அமைக்கப்படும்.

> 8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

> 4 மாவட்டங்களில் 4 இடங்களில் ஆறுகளின் குறுக்கே புதிய நீரொழுங்கிகள் அமைக்கும் பணி ரூ.6.04 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில் படுகை அணை மற்றும் தள மட்டச்சுவர் அமைக்கும் பணி ரூ.3.57 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழ்க்குமிழி அமைக்கும் பணி ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> 8 மாவட்டங்களில் 17 இடங்களில் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் ரூ.130 கோடியே 80 லட்சத்தில் அமைக்கப்படும்.

> ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், முனனாள் ஜமீன் கண்மாய்களான 14 குறு பாசனக் கண்மாய்களைத் தரப்படுத்தும் பணிகள் ரூ.9.34 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி மற்றும் கடற்கரைப் பாதுகாப்புப் பணிகளுக்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவதற்கான முதல்கட்டப் பணி ரூ.1.34 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722.55 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> 6 மாவட்டங்களில் 13 இடங்களில் அணைகள் மற்றும் அணைப் பகுதிகளில் உள்ள கட்டுமானங்களைப் புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் ரூ.19.80 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> 11 மாவட்டங்களில் 16 இடங்களில் உள்ள அணைகளின் பிற பழுதுகளைச் சரிபார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் ரூ.149.09 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> 11 மாவட்டங்களில் 48 இடங்களில் நீரொழுங்கிகள் மற்றும் மதகுகளில் உள்ள கதவுகளைப் பழுது மற்றும் பராமரிக்கும் பணிகள் ரூ.21.6 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> 7 மாவட்டங்களில் 11 இடங்களில் வெள்ளத் தணிப்புப் பணிகள் ரூ.131.28 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> செயற்கை முறை நிலத்தடி நீர் செறிவூட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள் ரூ.6.74 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அணைக்கட்டு ரூ.130 கோடியில் புனரமைத்துச் சீரமைக்கப்படும்.

> சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர வெள்ளத் தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடியில் மேற்கொள்ளப்படும்.

இயற்கை வளங்கள் துறை: > தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ஐ மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும்.

> விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புவிசார் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.

> சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் தொடர்பாக துறையின் அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் விதமாக ஒரு திட்ட மேலாண்மை அலகு நிறுவப்படும்.

> கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம் மற்றும் புவியியல் அமைப்பை மதிப்பிடுவதற்காக மாநில கனி ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும்.

> ரூ.37.50 லட்சத்தில் இரண்டு புவி தொழில்நுட்ப மையங்கள் திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.

> தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN) சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம் கொடக்கல் கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும்.

> ரூ.14 லட்சத்தில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம் தருமபுரி மாவட்டம் கடத்தூர் காப்புக் காட்டில் செயல்படுத்தப்படும்.

> தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில், ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை மென்பொருள் தொகுப்பு ரூ.75 லட்சத்தில் உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.