மகாராஷ்டிர மாநிலத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தில் நாக்பூரில் வெடித்த வன்முறை 6 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் என விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சிலர் புனிதமான மத அடையாளப்பொருட்களை எரித்ததாக வதந்தி பரவியதையடுத்து மத்திய நாக்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு வன்முறை வெடித்தது. இதில், ஏராளமான கடைகள், வீடுகள்,வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. பொதுமக்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற இந்த வன்முறை சம்பவத்தையடுத்து, கொட்வாலி, கணேஷ்பேட், டெஷில், லக்கடாஞ்ச், சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர், கபில் நகர் காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த துரித நடவடிக்கைகளை அடுத்து நந்தன்வன், கபில் நகர் காவல் நிலைய பகுதிகளில் மார்ச் 20-லும், பச்பவுலி, சாந்தி நகர், லக்கடஞ்ச், சக்கர்தாரா, இமாம்பாடா பகுதிகளிலிருந்து மார்ச் 22-லும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் நேற்று இதுகுறித்து கூறுகையில், “ நாக்பூரின் பல இடங்களில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறை 6 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அமைதி திரும்பியதையடுத்து எஞ்சியுள்ள டெஷில், கணேஷ்பேட், யசோதார நகர் காவல் நிலைய பகுதிகளிலிருந்து இன்று மாலை 3 மணியிலிருந்து முழுமையான அளவில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பதற்றமான பகுதிகளில் உள்ளூர் போலீஸாரின் ரோந்துப் பணி தொடரும் ” என்றார்.
முன்னதாக, நாக்பூர் வன்முறையின்போது ஏற்பட்ட சேதத்துக்கான தொகையை கலவரக்காரர்களிடமிருந்து வசூலிப்போம், தேவைப்பட்டால் புல்டோசரை உருளவிடுவோம் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.