விரைவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் குழு தீவு பிரதேசமான கிரீன்லாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘இது அராஜக போக்கு’ என கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட் (Múte Egede) தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து செல்லும் அமெரிக்க குழுவில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா வான்ஸும் உள்ளார் என தகவல்.
இந்த பயணத்தில் கிரீன்லாந்தின் பாரம்பரியத்தை உஷா வான்ஸ் அறிந்துகொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரீன்லாந்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை உஷா வான்ஸ் பார்வையிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸும் இடம்பெற்றுள்ளதாக தகவல்.
“கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு என்ன வேலை? எங்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதே அவர்களது நோக்கம். இது அராஜகம். அந்த நாட்டின் அரசியல் தலைவரின் மனைவி இங்கு என்ன செய்ய போகிறார்” என்று கிரீன்லாந்து பிரதமர் மியூட் கூறியுள்ளார். அமெரிக்க குழு வருகையை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சனும் கண்டித்துள்ளார். இந்த விவகாரத்தை தங்கள் தரப்பு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக ட்ரம்ப் அதிபர் ஆனதும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைப்பது குறித்து பேசியிருந்தார். தங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு இருக்கக்கூடாது என கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் தெரிவித்துள்ளன.
கிரீன்லாந்தின் அமைவிடம் மற்றும் அங்குள்ள மதிப்புமிக்க கனிம வளங்கள் முதலியவை அந்த பகுதியை அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆக்கியுள்ளது. ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலான பாதையில் கிரீன்லாந்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன? – டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு. அட்லாண்டிக் கடலில் அமெரிக்காவுக்கு வடகிழக்கே சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இத்தீவு அமைந்துள்ளது.
பசுமையும் பனிப்படலங்களும் கனிம வளங்களும் நிறைந்து எழில் கொஞ்சும் உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தை வாங்குவதில் ட்ரம்ப் பலமுறை ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறை அதிபராக இருந்த போதும் ட்ரம்ப் அந்த நடவடிக்கையை முன்னெடுத்தார். ‘வணிகத்திற்காக இத்தீவு திறந்திருக்கிறது. ஆனால் விற்பனைக்கல்ல’ என அப்போது கிரீன்லாந்து தீவு பிரதேச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்டிக்கின் கனிம வளங்களுக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கிரீன்லாந்து மீது கவனம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.