உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதி கலவரம் தொடர்பாக ஷாஹி ஜமா மசூதி கமிட்டி தலைவர் ஜாபர் அலி நேற்று கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்து கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷாஹி ஜமா மசூதியில் தொல்லியில் துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தொல்லியல் துறை நிபுணர்கள் சம்பல் பகுதிக்கு சென்றனர். அப்போது பெருந்திரளானோர் குவிந்து தொல்லியல் துறை நிபுணர்கள், அவர்களுடன் சென்ற போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக 79 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் யாருக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்கள் தாக்கல் செய்த சுமார் 130-க்கும் மேற்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. கலவரம் தொடர்பாக கடந்த பிப்ரவரியில் நீதிமன்றத்தில் 3,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 124 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சூழலில் ஷாஹி ஜமா மசூதி கமிட்டி தலைவர் ஜாபர் அலி நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சம்பல் போலீஸார் கூறியதாவது: சம்பல் பகுதியில் கலவரத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஜாபர் அலியும் ஒருவர். தொல்லியல் துறை நிபுணர்களுக்கு எதிராக சம்பல் பகுதி மக்களை, அவரே ஒன்று திரட்டினார். ஷாஹி ஜமா மசூதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அவரது வீடு உள்ளது. இதன்காரணமாக அவரை கைது செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பல் பகுதியில் குவிக்கப்பட்டு ஜாபர் அலி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில் அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீஸ் நிலைய வளாகத்திலும் ஏரளமானோர் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஜாபர் அலி ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.