புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ரமலான் மாதத்தில் முஸ்லிம் கைதிகள் ஐந்து வேளை தொழுகை நடத்த அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி.யின் எட்டவாவிலுள்ள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஃபர்ஹாம் அகமது. இவரது மனைவி உஸ்மா ஆபித் உ.பி.யின் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியான நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் நந்த் பிரபா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘ஓர் உயர்மட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதியை, ரமலான் மாதத்தில் தனது மதக் கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். இதன்படி, ஐந்து முறை தினசரி தொழுகை நடத்தவும், அந்த கைதி தன்னுடன் குர்ஆனை வைத்திருக்வும் அனுமதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அலகாபாத்தைச் சேர்ந்த ஃபர்ஹான் அகமது, பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜு பால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாகி உள்ளார். இதற்காக, அவர் எட்டாவா மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். முஸ்லிமான இவரை, புனித ரமலான் மாதத்தில், தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் ஃபர்ஹான் அகமதுவின் குடும்பத்தினருக்கு கிடைத்தது.
இதையடுத்து, அவரது மனைவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், உஸ்மா அபித் தனது மனுவில், ‘எனது கணவர் ரமலான் மாதத்தில் தனது மதப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும். இதில் ஐந்து முறை தினசரி தொழுகை செய்வதும் அடங்கும்’ என்று தெரிவித்திருந்தார்.
ஃபர்ஹான் அகமதுவின் வழக்கறிஞர் தீபக் குமார், தனது தரப்புக்காக ரமலான் மாதத்தில் தொழுகை நடத்தும் உரிமை மறுக்கப்படுவதாகவும், அவரது குர்ஆனும் பறிக்கப்பட்டதாகவும் வாதிட்டார். நீதிமன்றம் தலையிட்டு, மத வழக்கப்படி ஃபர்ஹான் தனது நம்பிக்கையை கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
வாதங்களைக் கேட்ட உயர் நீதிமன்ற அமர்வு, சிறை அதிகாரிகள் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பேணுவதோடு, கைதியின் மத உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. ஒருவரின் மதத்தைப் பின்பற்றும் உரிமை என்பது ஓர் அடிப்படை உரிமை. இது கைதிகளுக்கும் பொருந்தும் என இந்த தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிநபர்கள் கூட சட்டத்தின் கட்டமைப்பிற்குள் தங்கள் மத நம்பிக்கைகளை நிலைநிறுத்த உரிமை உண்டு என்பதை நினைவூட்டுகிறது. எனவே, இந்த உத்தரவு உபியின் இதர சிறைகளில் கைதிகளாக உள்ள முஸ்லிம்களுக்கும் அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.