மும்பை: துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவமதித்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், “ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்க முயன்ற விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். 2024 தேர்தலில் மகாராஷ்டிரா மக்கள் ‘கத்தார்’ யார், ‘குத்தார்’ யார் என்பதை முடிவு செய்துவிட்டனர். நகைச்சுவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் ஒரு உயர்மட்ட தலைவரை வேண்டுமென்றே அவமதித்து அவதூறு செய்ய முயற்சித்தால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது.
குணால் கம்ரா மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் காந்தியைப் போல், அரசியலமைப்பு புத்தகத்தை குணால் கம்ரா காட்டுகிறார். அவர்கள் இருவருமே அதைப் படிக்கவில்லை. கருத்து சுதந்திரத்திற்கு ஒரு வரம்பு உள்ளது. ராகுல் காந்தியின் அரசியலமைப்பைக் காண்பிப்பதன் மூலம் உங்கள் பாவங்களிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாது” என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், “நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் தனது செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாரும் சட்டம், அரசியலமைப்பு மற்றும் விதிகளை மீறிச் செல்லக்கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், காவல்துறை தலையீட வேண்டிய தேவையை உருவாக்குவதாக அவை இருக்கக்கூடாது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.
சிவ சேனா மூத்த தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான பிரதாப் பாபுராவ் சர்நாயக், “ஏக்நாத் ஷிண்டேவை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டேன். ஹாபிடேட் நகைச்சுவை அரங்கம் சட்டவிரோதமானது. இதற்கு முன் இந்த அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்களுக்கு எதிராக தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியை ஆதரிக்கும் இதுபோன்ற சட்டவிரோத ஸ்டுடியோக்களில் ஆய்வு நடத்தப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும். இது ஒரு சட்டவிரோத ஸ்டுடியோ என்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷண் கக்ரானியிடம் நான் கூறியுள்ளேன்.
ஒரு அமைச்சராக, நேற்று நடந்த சம்பவத்தை(ஸ்டூடியோ தாக்கப்பட்ட சம்பவத்தை) நான் ஆதரிக்கவில்லை. ஆனால் நான் அமைச்சராக இருப்பதற்கு முன்பு ஒரு சிவ சைனிக். எங்கள் கட்சித் தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக யாராவது ஏதாவது பேசினால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதால் எங்கள் சிவ சைனிக்குகள் அந்த நடவடிக்கையை எடுத்தனர்” என்று தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, எம்எல்ஏக்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜகவில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்றும் குணால் கம்ரா குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த அரசியல் நகைச்சுவை வீடியோவை அடுத்து, சிவ சேனா இளைஞரணியினர், அவர் தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர். இதற்கு, சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.