ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்த காமெடியன்: ஹோட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்

மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் கிண்டல் செய்தது சர்ச்சையாகியுள்ளது. அந்த காமெடியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சார்ந்த ஹேபிடட் கன்ட்ரி கிளப், அவரது நிகழ்ச்சி நடந்த நட்சத்திர ஹோட்டல் ஆகியனவற்றை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினர். மேலும் அவரது நிகழ்ச்சி படமாக்கப்பட்ட ஹோட்டலையும் தாக்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வரும் நிலையில் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார்.

இந்நிலையில் ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியனாக, அதுவும் அரசியல் நையாண்டிகளில் பெயர் பெற்றவருமான குணால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்துள்ளார். தனது நிகழ்ச்சியில் ஷிண்டேவை ஒரு துரோகி என்று விமர்சித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிவசேனா கட்சியினர் குணால் நிகழ்ச்சி நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலை சூறையாடினர். அவரைக் கைது செய்ய கோரி ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

குணால் கம்ரா பற்றி சிவசேனா எம்.பி.நரேஷ் மஸ்கே கூறுகையில், “காமெடியன் குணால் கம்ராவை பிற கட்சியினர் இயக்குகின்றனர். ஷிண்டேவை பகடி செய்யும்படி அவருக்கு பணத்தை அளித் தருகின்றனர்.” என்றார். மேலும், ‘இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும். அவர் எங்கு சென்றாலும் சிவசேனா தொண்டர்கள் தாங்கள் யார் என்று காட்டுவார்கள்’ என்றும் கம்ராவை நரேஷ் எச்சரித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே வெளியிட்ட அறிக்கையில், “குணால் கம்ராவின் கருத்துக்கள் மிக மோசமாக உள்ளன. அவர் விமானங்களில் பயணிக்க தடை இருக்கிறது. அவரைப் போல் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

அதேவேளையில் சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பிற்குறிய குணால் கம்ரா, நீங்கள் உறுதியாக இருங்கள். அவர்கள் உங்களை விமர்சிப்பார்கள். ஆனால் நீங்கள் மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளீர்கள். நீங்கள் மனதிலிருந்து பேசியுள்ளீர்கள். அது உங்கள் உரிமை. அதை பாதுகாக்க நான் என் இறுதி மூச்சு வரை உறுதுணையாக இருப்பேன்.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.