“காமெடியன் குணால் கம்ரா எந்த தவறும் செய்யவில்லை” – உத்தவ் தாக்கரே ஆதரவு

மும்பை: ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா எந்த தவறும் செய்யவில்லை என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள விதான் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “குணால் கம்ரா தனது கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்தினார். அவர் உண்மைகளை கூறினார். பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தினார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதித்த சோலாபுர்கர் மற்றும் கோரட்கர் ஆகியோர் மீது இந்த துரோகிகள் நடவடிக்கை எடுக்கவில்லை,” என்று கூறினார்.

சத்ரபதி சம்பாஜி மகாராஜ் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நாக்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கோரட்கர் மற்றும் நடிகர் ராகுல் சோலாபுர்கர் ஆகியோர் தெரிவித்ததை அடுத்து, அவர்களை கைது செய்யக் கோரி மாநிலத்தில் நடந்த போராட்டங்களை உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.

மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியின் தொண்டர்களால் குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரேவின் மகனும் சிவசேனா(யுபிடி) எம்எல்ஏவுமான ஆதித்ய தாக்கரே, “நேற்று, குணால் கம்ராவின் வீடியோ கிளிப்பை பார்த்தேன். ஏக்நாத் ஷிண்டேவின் தொண்டர்கள் எப்போது அவரை ஒரு துரோகி மற்றும் திருடன் என்று முடிவு செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது? அவர் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. ஆனால், ஏக்நாத் ஷிண்டே ஏன் கோபப்படுகிறார்?

யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே. குணால் கம்ரா நம்மைப் பற்றி, பலரைப் பற்றி, மோடி பற்றியும் பலமுறை பேசியுள்ளார். ஆனால் யாரும் இப்படி எதிர்வினையாற்றவில்லை. நாக்பூரில் நாசவேலை செய்தவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு பெறப்படும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். அதேபோல், நேற்று குணால் கம்ராவுக்கு எதிராக நாசவேலை செய்தவர்களிடம் இருந்து இழப்பை வசூலிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் தனது கண்களைத் திறந்து யார் அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அது எதிர்க்கட்சியா அல்லது அவரது நண்பர்களா?

குணால் கம்ரா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஏக்நாத் ஷிண்டே ஒரு துரோகி மற்றும் திருடன் என கூறி இருந்தால், குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது, ஏக்நாத் ஷிண்டே முதலில் தான் ஒரு துரோகி மற்றும் திருடனா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

என்ன நடந்தது? – ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, எம்எல்ஏக்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி (ஏக்நாத் ஷிண்டே) ஆதாயம் அடைந்தார் என விமர்சித்திருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்றும் இருந்தார். இந்த அரசியல் நகைச்சுவை வீடியோவை அடுத்து, சிவ சேனா இளைஞரணியினர், அவர் தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.