கோவை, சிங்காநல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக சென்றுள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ஒரு கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்றுள்ளது. தொடர்ந்து அவர் வழிவிடாமல் இருந்த காரணத்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிங்காநல்லூர் காவல்துறையினர், உழவர் சந்தை அருகே அந்தக் காரை நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த அன்புசெல்வன் (வயது 43) என்பவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. பி.டெக் பட்டதாரியான அவர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காவல்துறையின் கேள்விக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார்.

குடும்ப பிரச்னையால் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் காரில் இருந்து காவல்துறையினர் ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
அப்போது அவர், ‘இது ஏர்கன்’ என்று கூறியுள்ளார். அது உண்மையிலும் ஏர்கன் தானா என்று கண்டறிய துப்பாக்கி கோவை ஆயுத தொழிற்சாலை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து குடிபோதையில் அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“துப்பாக்கி குறித்து தெரியவரும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
