சவுக்கு சங்கர் வீட்டுக்குள் அத்துமீறல்: இபிஎஸ், அண்ணாமலை, திருமாவளவன், வைகோ கண்டனம்

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) காலை சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (மார்ச் 24) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மனித கழிவையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை: “திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல் துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு. திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

திருமாவளவன்: “சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.

எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல்அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ: “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து ஒரு கும்பல் மனித கழிவு மற்றும் சாக்கடை நீரை ஊற்றி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது . தூய்மைப் பணியாளர் போர்வையில் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் மேற்கண்ட அராஜகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் இத்தகைய வீபரீதங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்தின் அடித்தளம் செல்லரித்துப் போய் விடும். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாத கோழைகள் இப்படி இழிவான செயலில் ஈடுபடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த தாக்குதல் பின்னணியில் உள்ளவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.