புதுச்சேரி: “சிபிஐ வழக்குக்குப் பொறுப்பேற்று புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “புதுச்சேரி பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் 63 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவர் கைதாகியுள்ள நிலையில், அவரது டைரி, செல்போன்கள், சிபிஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துறையில் புதிய பேருந்து நிலையம் கட்டியது, குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
சங்கராபரணி ஆற்றில் கழிவுநீரை சுத்திகரித்து விடுவதற்கான ஒப்பந்தத்தில் அதிகளவில் தொகை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு, செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதிலும் முறைகேடு நடந்துள்ளது. பொதுப் பணித்துறை அமைச்சர் விசாரணைக்கு தன்னை உட்படுத்தி பதவியை விட்டு விலகவேண்டும். அதிகாரிகளின் முறைகேடுகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்வருக்கு தெரியாமல் நடந்திருக்காது.
முறைகேடுகள் புகாரில் தற்போது பூனைக்குட்டிகள் வெளிவந்துள்ளன. இனிமேல் பூனைகளே வெளியே வரும். பாரபட்சம் இன்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுப் பணி துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ரங்கசாமியின் ஈடுபாடும் இதில் உள்ளது. இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களில் கொள்ளையடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியே தூக்கி வீசியது அராஜகம்.
ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப் பணித்துறை அமைச்சர் சொத்து விவரங்களையும் விசாரிக்க வேண்டும். புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் சிபிஐ வழக்குக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவரது வீடு முற்றையிடப்படும். தமிழக முறைகேடுகள் தொடர்பாக கேட்கிறீர்கள். அது குறித்து பேச விரும்பவில்லை. புதுவை எங்கள் மாநிலம் என்பதால் அதுகுறித்து மட்டுமே பேசுவோம்,” என்றார்.