தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ்குமார், ‘‘அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். அரசியல் கட்சிகளிடம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு பிரச்சினைகள், குறைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இதுதொடர்பான விவரங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி இருந்தார்.
தமிழகத்தை பொருத்தவரை, பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரிக்க அனுமதிக்காதது, ஒரே நபர் 2 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது ஆகியவை தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இதற்கும் தீர்வுகாண வேண்டியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நாதக, விசிக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலில் நிலவும் குறைபாடுகள், சட்டப்பேரவை தொகுதி, வாக்குச்சாவடி அளவில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள், வாக்காளர் அட்டை எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வாக்குச்சாவடிகள் அமைவிடம் தொடர்பான ஆட்சேபங்கள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.