ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஐதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் இஷான் கிஷன் 106 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் கண்டது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ராஜஸ்தான் இறுதி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 44 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 70 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம் + உள்ளூர் + டி20 லீக்குகள்) ஒரு இன்னிங்சில் அதிக முறை 250 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது. ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 4 முறை (287, 286, 277, 266) 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரே அணியும் (தலா 3 முறை) உள்ளன.