புதுடெல்லி: கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கான நீதித்துறை பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறைப் பணிகள், அவரிடம் இருந்து திரும்பப் பெறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர்(பட்டியல்) பெயரில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு குறிப்பில், “சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறைப் பணிகள் மறு உத்தரவு வரும் வரை திரும்பப் பெறப்படுகின்றன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லம், துக்ளக் சாலையில் உள்ளது. இங்கு கடந்த 14ம் தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து சென்ற போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதற்கிடையே, அங்கு உள்ள அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது குறித்து அரசுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு இதுபற்றி 15-ம் தேதி தகவல் கொடுக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து, பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் விளக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். இதுகுறித்து ஆலோசிக்க கொலீஜியம் கூட்டமும் நடைபெற்றது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் கடந்த 22-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, யஷ்வந்த் வர்மா மீதான புகார் குறித்து விசாரிக்க 2 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை சஞ்சீவ கண்ணா நியமித்தார். இந்த குழுவில் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விசாரணையை முடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதேநேரம், யஷ்வந்த் வர்மாவுக்கு இப்போதைக்கு எந்த பணியும் வழங்க வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்யும் வரை, வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, நீதிபதி வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர் பான புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா வழங்கினார். அவற்றை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்மூலம் நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பைகளில் பாதி எளிந்த நிலையில் உள்ள பணத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்பது அதில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நீதிபதி வர்மா மறுப்பு: இதுகுறித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது விளக்க கடிதத்தில், ‘அரசு இல்லத்தில் நாங்கள் பயன்படுத்தி வரும் இடத்தில் இருந்து பணம் கைப்பற்றப்பட வில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த பணம் குறித்து எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது. அந்த பணத்துடன் எங் களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தவிர, அன்று இரவு எடுத்ததாக கூறப்படும் பணம் எனது உறவினர்களிடமோ, பணி யாளர்களிடமோ காட்டப்படாதது துரதிர்ஷ்டவசம்’ என்று தெரி வித்துள்ளார்.
இதற்கிடையே, சம்பவம் நடந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள இந்திரஜித் என்பவர் கூறும்போது, “இந்த பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு குப்பைகளை சேகரித்தேன். அப்போது சில 500 ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் இருந்தன. இன்றும் சில நோட்டுகள் கிடைத்தன” என்றார்.