பாட்னா,
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் சமீபத்தில் பாட்னாவில் ஒரு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைத்தபோது, கையசைத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார். அவர் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், பீகார் மாநிலம் கயாவில், மத்திய மந்திரியும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன் ராம் மஞ்சியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர் கூறியதாவது:- நிதிஷ்குமார் மீது எந்த தவறும் இல்லை. ஆட்சேபிக்க எதுவும் இல்லை. சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர்கள், தேசிய கீதத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாருக்கு பாடம் நடத்தத் தேவையில்லை. நிதிஷ்குமார் 20 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் நல்லாட்சி நடத்தி உள்ளார். உலகம் முழுக்க பாராட்டு பெற்றுள்ளார். அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.