ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஐதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 106 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் கண்டது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ராஜஸ்தான் இறுதி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 44 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 70 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் எதிர்பார்த்தது போலவே இது மிகவும் கடினமானதாக இருந்தது. ஐதராபாத் அணி நன்றாக விளையாடியது. நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இன்றைய ஆட்டம் குறித்து நாங்கள் கலந்து பேச வேண்டி உள்ளது. முதலில் பந்து வீசும் முடிவை நாங்கள் கூட்டாக சேர்ந்து எடுத்தோம்.
அது நல்ல முடிவு தான். அதை சிறப்பாக செயல்படுத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் இருந்து சில பாசிட்டிவ்களை நாங்கள் பெற்றுள்ளோம். துருவ், சஞ்சு பேட் செய்த விதம் அருமை. இன்னிங்ஸின் இறுதியில் ஹெட்மயர் மற்றும் ஷுபம் சிறப்பாக ஆடினர். துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பந்து வீசி இருந்தார். சந்தீப் சர்மாவும் சிறப்பாக செயல்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.