புதுடெல்லி: பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ டெல்லி இல்லத்தில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அங்கு சென்ற தீ அணைப்புத் துறையினர். அங்கு கட்டுக் கட்டாக எரிந்த ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அது குறித்து காவல்துறைக்கு தெரிவித்தனர். பின்னர், காவல் துறையினர் அதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கொலீஜியம் மூவர் குழு ஒன்றை அமைத்தது. மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த 20-ம் தேதி பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரைக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒன்றும் “குப்பைத் தொட்டி” அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இடமாற்றம் நடந்தால், அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் அச்சுறுத்தியது. இதையடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யும் பரிந்துரையை கொலீஜியம் நிறுத்திவைத்தது.
இந்நிலையில், “சிறந்த நீதி நிர்வாகத்திற்காக” நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தலைநகர் டெல்லிக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இன்று மீண்டும் கொலீஜியம் கூடியது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. நீதிபதி வர்மா, ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாகி வந்தவர் என்பதால், அவரை திருப்பி அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அனைத்து நீதித்துறைப் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை திரும்பப் பெறப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. நடந்தது என்ன? > நீதிபதி வீட்டில் எரிந்து கருகிய பணம் கைப்பற்றப்பட்டது உறுதி: புகைப்படம், வீடியோ வெளியிட்டது உச்ச நீதிமன்றம்