பேய்க்கும் பேய்க்கும் சண்டை… குஜராத் vs பஞ்சாப் பிளாக்பஸ்டர் போட்டி – பிளேயிங் XI இதோ

IPL 2025 GT vs PBKS: 18வது ஐபிஎல் சீசன் நேற்று முன்தினம் (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தின.

IPL 2025: இன்று டெல்லி – லக்னோ மோதல்

அந்த வகையில், இன்று (மார்ச் 24) 2025 ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. அதாவது கடந்தாண்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் தற்போது லக்னோ அணியின் கேப்டனாகி உள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் தற்போது டெல்லி அணியில் உள்ளார், ஆனால் கேப்டன் இல்லை. எனவே, இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

IPL 2025: குஜராத்-  பஞ்சாப் பிளாக்பஸ்டர் போட்டி

ஆனால், இதைவிட நாளை (மார்ச் 25) நடைபெறும் குஜராத் – பஞ்சாப் போட்டியே மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம். கடந்த முறை கேகேஆர் அணியில் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார். சுப்மன் கில் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் கடந்தாண்டை விட பலமாக காணப்படுகிறது. இரு அணிகள் குறித்தும் இங்கு விரிவாக காணலாம். 

IPL 2025 GT vs PBKS: இளமையான குஜராத் அணி

குஜராத் அணியின் டாப் ஆர்டர் கடந்த 3 ஆண்டுகளை விட இந்தாண்டு பலமாகியிருக்கிறது. ஓப்பனிங்கில் சுப்மன் கில்லுடன் இம்முறை ஜாஸ் பட்லர் களமிறங்குவார். இதையடுத்து, 3ம் இடத்தில் இடது கை பேட்டராக சாய் சுதர்சன் களமிறங்குவார். இவர்கள் மூவரில் ஒருவர் 13வது ஓவர் வரை களத்தில் இருந்தாலே ஸ்கோர் சீராக உயரும் எனலாம்.

அடுத்து மிடில் ஆர்டரில் கிளென் பிலிப்ஸ், ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதையடுத்து, பின்வரிசையில் ரஷித் கான், ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள். மானவ் சுதார் அல்லது முகமது அர்ஷத் கான் ஆகியோர் இம்பாக்ட் வீரராக வர அதிக வாய்ப்புள்ளது. பேக் அப்பாக மஹிபால் லோம்ரோர், நிஷாந்த் சிந்து, சாய் கிஷோர், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

IPL 2025 GT vs PBKS: குஜராத் பலமாக இருக்க இதுதான் காரணம்!

மேலும், டாப் ஆர்டர் மட்டுமின்றி மிடில் ஆர்டரும் வலுவாக இருக்கிறது. இடது கை சுழற்பந்துவீச்சாளர், ஆப் ஸ்பின்னர், உலகத் தரமான லெக் ஸ்பின்னர் என அனைத்து வகை சுழற்பந்துவீச்சு ஆப்ஷன்களும் உள்ளன. பவர்பிளேவில் பந்துவீச சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரும் வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார்கள். மிடில் ஆர்டரில் ரஷித் கான், மானவ் சுதார் உள்ளிட்டோரின் தாக்கம் இருக்கும். ரபாடா மிடிலிலும் டெத் ஓவரிலும் கூட தேவைப்படும் நேரத்தில் பந்துவீசலாம். பேட்டிங்கை போல் பந்துவீச்சும் சரியாக அமைந்திருக்கிறது என்பதால் கடந்தாண்டை விட குஜராத் பலமாக தெரிகிறது. 

IPL 2025 GT vs PBKS: பயமுறுத்தும் பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் மட்டுமின்றி பயிற்சியாளர் குழுவும் மொத்தமாக மாறியிருக்கிறது. இந்தாண்டு அணியில் இருக்கும் பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே கடந்தாண்டு விளையாடியவர்கள் எனலாம். மற்ற அனைவருமே மொத்தமாக மாறியுள்ளது. டாப் ஆர்டரில் பிரப்சிம்ரன் சிங்குடன் ஜோஷ் இங்கிலிஸ் ஓப்பனிங் இறங்குவார் எனலாம். நம்பர் 3இல் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்டுவார்.

மிடில் ஆர்டரில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், நெஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோர் இருப்பார்கள். இதனால் வெளிநாட்டு பந்துவீச்சாளர்களுக்கான வாய்ப்பே இல்லை. இதையடுத்து, ஹர்பிரீத் பிரார், சஹால், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுவார்கள். இம்பாக்ட் வீரராக யாஷ் தாகூர் அல்லது வைஷாக் விஜயகுமார் வர வாய்ப்புள்ளது.

IPL 2025 GT vs PBKS: சிறந்த பேக்-அப் வீரர்கள்

இதில் டாப் ஆர்டரை போல் மிடில் ஆர்டரில் அதிரடி வீரர்களாக நிரம்பியிருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களுக்கு பேக்-அப்பில் யான்சன், ஆரோன் ஹார்டி இருக்கிறார்கள். நெஹல் வதேராவுக்கு பேக்-அப்பாக சூர்யான்ஷ் ஷேட்ஜ், முஷீர் கான், விஷ்ணு வினோத் உள்ளனர். ஓப்பனர்களுக்கு பேக்அப்பாக பிரியான்ஷ் ஆர்யா உள்ளார்.

IPL 2025 GT vs PBKS: 10 ஆண்டுகளுக்கு பின் பிளே ஆப் போக நல்ல வாய்ப்பு

பேட்டிங், பந்துவீச்சு பலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் நிரம்பியிருக்கிறார்கள். அதிரடி தொடக்கமும், மிடில் ஆர்டரில் சிக்ஸர்களை அடிக்கும் வீரர்களும், பலமான பந்துவீச்சும் இருப்பதால் 10 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் பிளே ஆப் போக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

IPL 2025 GT vs PBKS: விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

குஜராஜ் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இரு அணிகளுமே முன்பை விட அசுர பலத்துடன் வந்திருப்பதால் முதல் வெற்றியை பெறப்போவது யார் என்ற கேள்வி அதிகமாகி உள்ளது. நிச்சயம் இரு அணிகளும் கடைசி வரை போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம். இந்திய அணியின் வருங்கால கேப்டன் மெட்டீரியல்களாக பார்க்கப்படும் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் இது ஒரு முக்கியமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL 2025 GT vs PBKS: இரு அணிகளின் பிளேயிங் லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், ராகுல் தெவாட்டியா, வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா. இம்பாக்ட் வீரர்: மானவ் சுதார்/முகமது அர்ஷத் கான்.

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல். இம்பாக்ட் வீரர்: வைஷாக் விஜயகுமார்/யாஷ் தாக்கூர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.