'போயிங்' விமான நிறுவனத்தில் 180 என்ஜினீயர்கள் பணி நீக்கம்

பெங்களூரு,

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ‘போயிங்’ விமான நிறுவனத்தில் இருந்து 180 என்ஜினீயர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியவர்கள் ஆவர்.பெங்களூருவில் போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், பெங்களூருவில் விமானத்துக்கு தேவையான சில உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளை நிறுவி நடத்தி வருகிறது. மேலும் சென்னையிலும் போயிங் விமான நிறுவன தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பெங்களூருவில் தான் போயிங் நிறுவனம் அதிக முதலீட்டையும், வருமானத்தையும் ஈட்டி வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.8 ஆயிரத்து 600 கோடி வருவாயை பெங்களூரு கிளை ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் 7 ஆயிரம் பணியாளர்களை கொண்ட இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் உலகளாவிய நெருக்கடியை சந்தித்த நிலையில் 10 சதவீத ஆட்குறைப்பு பணி நடக்கும் என்று அறிவித்தது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள போயிங் நிறுவனத்தில் வேலை பார்த்த 180 ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய என்ஜினீயர்கள் ஆவர். அவர்களுக்கு பணி நீக்கம் குறித்து எந்தவொரு நோட்டீசையும் போயிங் நிறுவனம் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நிர்வாக சீர்திருத்தம் காரணமாக 180 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் அவர்கள் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. இது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.