பெங்களூரு: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியலமைப்பில் திருத்தம் நிகழும் என்று நான் கூறியதாக பாஜக கூறுவதில் உண்மை இல்லை என்று டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
டி.கே. சிவகுமார் செய்தியாளர் சந்திப்பு: இது தொடர்பாக இன்று (மார்ச் 24) பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “நான் ஜேபி நட்டாவை விட விவேகமான, மூத்த அரசியல்வாதி. நான் கடந்த 36 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் இருக்கிறேன். எனக்கு அடிப்படை பொது அறிவு இருக்கிறது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியலமைப்பில் மாற்றம் நிகழம் என்று நான் சொல்லவில்லை. பல்வேறு தீர்ப்புகளுக்குப் பிறகு பல மாற்றங்கள் இருக்கும் என்று நான் சாதாரணமாகச் சொன்னேன். அரசியலமைப்பை மாற்றப் போகிறோம் என்று நான் சொல்லவில்லை.
அவர்கள்(பாஜக) எதை மேற்கோள் காட்டினாலும் அது தவறு. அவர்கள் அதைத் தவறாக மேற்கோள் காட்டுகிறார்கள். நாங்கள் ஒரு தேசியக் கட்சி. அரசியலமைப்பு என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் என்னைத் தவறாக மேற்கோள் காட்டுகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் நான் வழக்குத் தொடுப்பேன்.” என்று தெரிவித்தார்.
டி.கே. சிவகுமார் என்ன சொன்னார்?: முன்னதாக நேற்று (மார்ச் 23) தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு சர்ச்சையாகி இருப்பது குறித்து விவரித்தார். அவர் தனது பேச்சில், “இதைச் சுற்றி ஒரு பெரிய விவாதம் நடக்கிறது. பல பாஜக தலைவர்கள் இதை விமர்சித்துள்ளனர். டயர் பஞ்சர் சரிசெய்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்குமே முஸ்லிம்கள் தகுதியானவர்கள் என்று கூறி வருகின்றனர். ஆனால் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் மேம்படுத்துவது நமது கடமை.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு வாய்ப்புகளையும் இடஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளோம். ஆனால் அவர்களை பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கு சிறிய அளவில் உதவவும், அவர்களை வளர்ச்சி செயல்முறையின் ஒரு பகுதியாக மாற்றவுமே, ஒப்பந்தப் பணிகளை அவர்களுக்கு வழங்க நாங்கள் விரும்பினோம்.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம். மக்கள் நீதிமன்றத்தை அணுகுவார்கள் என்பது எனக்குத் தெரியும். நல்ல நாளுக்காகக் காத்திருப்போம்; நல்ல நாள் வரும். நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. அரசியலமைப்புச் சட்டமும் மாறிக்கொண்டே இருக்கும். அரசியலமைப்பை மாற்றும் தீர்ப்புகளும் உள்ளன.” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பிய பாஜக: டி.கே. சிவகுமாரின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய விவாதப் பொருளாக மாறியது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு, “கர்நாடகாவில் அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில காங்கிரஸ் அரசின் முடிவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அவருக்கு ஆதரவாக, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முன்வரிசை எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். கிரண் ரிஜிஜு கூறுகையில், “அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசியலமைப்பை அவர்கள் (காங்கிரஸ்) மாற்றப் போகிறார்கள் என்று கூறி இருக்கிறார். இந்த அறிக்கையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா, “மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்துப் பேசிய ஜகதீப் தன்கர், “ஆனால், உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு நட்டா, “அத்தகைய சட்டங்கள் மற்றும் விதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு கார்கே பதிலளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கருத்துக்கு எதிராக பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, அரசியலமைப்பைப் பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட கட்சி காங்கிரஸ் என கூறினார்.
இரு தரப்பிலிருந்தும் கூச்சல் குழப்பம் அதிகரித்ததை அடுத்து, அவைத் தலைவர் தன்கர் பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார். இந்த பின்னணியில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு டி.கே. சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.