அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம் 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்ய முடியும். 15 நிமிட சார்ஜில் 320 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். சீனாவின் பிஒய்டி நிறுவனம், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன சாதனையை முறியடித்து உள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்டி நிறுவனர் வாங் சூயான்பு, சீனாவின் சென்சென் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்களது நிறுவனம் சார்பில் சூப்பர் இ-பிளாட்பார்ம் சார்ஜரை உருவாக்கி உள்ளோம். இந்த சார்ஜர் மூலம் 5 நிமிடங்களில் காரை சார்ஜ் செய்யலாம். ஐந்து நிமிட சார்ஜில் 400 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக பிஒய்டி நிறுவனத்தின் ஹான் எல், டேங் எல் மின்சார கார்களில் 5 நிமிட சார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்படும். இதன்பிறகு எங்களது அனைத்து மின்சார கார்களிலும் இதே வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். சீனா முழுவதும் புதிய தொழில்நுட்பத்தில் 4,000 அதிவேக சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளோம். இவ்வாறு வாங் சூயான்பு தெரிவித்தார்.
பிஒய்டி நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டில்42 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனை 60 லட்சமாக அதிகரிக்க அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. தற்போது பிஒய்டி நிறுவனத்தின் 90 சதவீத கார்கள் சீனாவில் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. வெளிநாட்டு ஏற்றுமதியை அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ஐந்து நிமிட சார்ஜிங் வசதியால் பிஒய்டி கார்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.