Jio Mukesh Ambani Latest News: ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 50 ஜிபி வரை ஏஐ (AI) மூலம் இயங்கும் கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த இலவச சேவையானது ரூ.299 மற்றும் அதற்கு மேல் தொடங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கும் மற்றும் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் கிடைக்கிறது.
ஜியோவின் துணிச்சலான இந்த நடவடிக்கை கூகுளுக்கு மிகப்பெரிய சவால்களை உருவாக்கக்கூடும். அதேபோல் வணிகங்களுக்கு ஒன்ட்ரைவ் மற்றும் அஸூர் ஸ்டோரேஜ் போன்ற பல கிளவுட் ஸ்டோரேஜ் விருப்பங்களை வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம்.
ஏனென்றால் தற்போது கூகுள் நிறுவனம் ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் மூலம் இலவச கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. கூகுள் டிரைவ் உட்பட கூகுளின் கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகள் மூலம் பயனர்கள் தங்கள் தரவை ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஜிமெயில் மூலம் 5 ஜிபி முதல் 15 ஜிபி வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆனால் கூடுதல் சேமிப்பிற்கு சந்தா கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.
மறுபுறம் ஜியோவின் புதிய சலுகையான 50 ஜிபி வரை கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெறலாம் என்ற திட்டத்தின் மூலம் கூகுள் டிரைவிற்கு மாற்றாக இது அமையலாம்.
ரிலையன்ஸ் ஜியோ தனது 2024 ஆண்டு பொதுக் கூட்டத்தின் (AGM) போது AI மூலம் இயங்கும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் 100ஜிபி வரை இலவச ஏஐ கிளவுட் ஸ்டோரேஜை அணுக முடியும் என இருந்தது. ஆனால் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களைக் கொண்ட அனைத்து ப்ரீபெய்டு பயனர்களுக்கும், அனைத்து போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை கிடைக்கிறது.
இதன்மூலம் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஆன்லைனில் அதிக அளவில் சேமிக்க முடியும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஜியோவின் புதிய ஸ்டோரேஜ் நோக்கி வரலாம்.
ஜியோ ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, இலவச 50ஜிபி ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் ரூ.299 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையில் உள்ள ஜியோ திட்டங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்த மதிப்புள்ள ரீசாஜ் திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச அம்சத்தை பெற முடியாது.
எனவே 50 ஜிபி இலவச ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.299 திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல அனைத்து ஜியோ போஸ்ட்பெய்டு திட்டங்களும் 50ஜிபி இலவச ஏஐ மூலம் இயங்கும் கிளவுட் ஸ்டோரேஜுடன் வருகின்றன.
இலவச கிளவுட் சேமிப்பு சேவை மூலம் ஜியோவின் நடவடிக்கை கூகுள் சேவைகளுக்கு, குறிப்பாக ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவிற்கு சவால் விடும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.