வெல்ல வைத்த வீரன்
“கடைசி ஓவரில் மோகித் சர்மாவுக்கு பண்ட் அப்பீல் செய்தபோது பவுண்டரி லைனுக்கு வெளியேதான் நின்றேன். அது அவுட்டா? இல்லையா? என ரசிகர்கள் பதைபதைப்புடன் இருந்தனர். நாட் அவுட் எனத் தெரிந்தவுடன் ரசிகர்கள் செய்த ஆர்ப்பரிப்பு இருக்கிறதே…” டெல்லி Vs லக்னோ போட்டிக்குப் பிறகு சுனில் கவாஸ்கர் இப்படி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

மைதானத்தில் எழுந்த ஆர்ப்பரிப்புக்குக் காரணம் அஷுதோஷ் சர்மா. வாய்ப்பே இல்லாத இடத்திலிருந்து போட்டியை இழுத்து வந்து கையில் ஒரு விக்கெட் இருக்கும்போது கடைசி ஓவரில் சிக்சர் அடித்து போட்டியை வெல்ல வைத்தார்.
அஷுதோஷ் சர்மா க்ரீஸூக்குள் வருகையில் டெல்லி அணி 66-5 என்ற நிலையில் இருந்தது. வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. கையில் விக்கெட்டுகள் இல்லை. இக்கட்டான நிலை. அந்த சமயத்தில் ஸ்டப்ஸூடனும் விப்ராஜூடனும் நின்று விக்கெட்டை விடாமல் அதிரடியாக ஆடினார். ஒரு கட்டத்தில் அவர்கள் அவுட் ஆகி வெளியேறியபோதும் சோர்வடையவில்லை. கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.
கூலாக ரன்களைச் சேர்த்த அஷுதோஷ்
கூக்ளியாக வீசும் ரவி பிஷ்னோய் வீசிய 17 வது ஓவரில் 6, 4, 6 என அடித்து 17 ரன்களைச் சேர்த்தார். ப்ரின்ஸ் யாதவ் வீசிய அடுத்த ஓவரிலும் பெரிய பவுண்டரிக்களை அடித்து 16 ரன்களை அடித்தார். கடைசி ஓவரிலும் அந்த திக்..திக்.. தருணத்தில் கூலாக ஒரு சிக்சரை பறக்கவிட்டு போட்டியை வெல்ல வைத்தார்.
அஷுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி போட்டிகளை வெல்ல வைப்பது இது முதல் முறையல்ல. கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்தார். அங்கே சஷாங்க் சிங்கும் அஷுதோஷ் சர்மாவும்தான் நன்றாக ஆடினார்கள். இருவரும் அதிரடியாக ஆடி பல போட்டிகளை நெருக்கமாகக் கொண்டு சென்றனர். மும்பைக்கு எதிரான போட்டியில் 7 சிக்சர்களை அடித்து அரைசதத்தைக் கடந்திருப்பார் அஷுதோஷ். பும்ராவையெல்லாம் ரொம்பவே ஆதிக்கமாக அட்டாக் செய்து ஆடியிருந்தார்.

பஞ்சாப் அணி அஷுதோஷை 20 லட்ச ரூபாய்க்குதான் வாங்கியிருந்தது. ஆனால், அந்த அணிக்கு அடித்த ஜாக்பாட்டாக மாறிப்போனார். அதனால் இந்த சீசனுக்கு முன்பான மெகா ஏலத்தில் பெங்களூருவும் டெல்லியும் போட்டி போட்டதில் 3.8 கோடி ரூபாய்க்கு டெல்லி அவரை வாங்கியிருந்தது.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அதிரடி
மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த அஷுதோஷ் சர்மாவுக்கு கிரிக்கெட்தான் எல்லாமே. சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட அஷுதோஷ், மத்திய பிரதேச அணிக்கும் தேர்வானார். இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அணியில் சிறப்பாக ஆடியிருந்தார். ஆனாலும் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த் பண்டித்துக்கும் அஷுதோஷூக்கும் எதோ மனத்தாங்கல். அஷுதோஷ் ஓரங்கட்டப்பட்டார். ‘மத்திய பிரதேச அணிக்காக நான் கடைசியாக ஆடிய போட்டியில் 84 ரன்களை எடுத்திருந்தேன். ஆனாலும் என்னை ஏன் ஒதுக்கினார்கள் எனத் தெரியவில்லை.’ என பின் நாட்களில் அஷுதோஷ் வேதனைப்பட்டிருக்கிறார்.

மத்திய பிரதேச அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு வாய்ப்பில்லாமல் இருந்த சமயத்தில் உள்ளூர் போட்டிகளுக்கு அம்பயராக நிற்பதற்கெல்லாம் சென்றிருக்கிறார். அதன்பிறகுதான், இரயில்வே அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கே கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் அசத்தினார். சையத் முஷ்தாக் அலி போட்டி ஒன்றில் 11 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங் வைத்திருந்த அதிவேக அரைசதம் எனும் சாதனையை முறியடித்தார். அதன்பிறகு கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தினால் முத்திரை பதிக்கவே, அதன்பிறகுதான் பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
பஞ்சாப் அணியில் தொடங்கிய பயணம்
தொடர்ந்து சொதப்பும் அணியில் இருந்தாலும் அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டத் தவறவே இல்லை. இருந்தும் ஏனோ பஞ்சாப் அணி அவரைத் தக்க வைக்கவில்லை.
‘கடந்த ஆண்டு நான் அதிரடியாக ஆடிய போதும் சில போட்டிகளை என்னால் கடைசி வரை நின்று வென்றுகொடுக்க முடியவில்லை. அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்று வந்திருக்கிறேன்.’ என ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு அஷுதோஷ் பேசியிருக்கிறார்.

தன்னுணர்தலையும் சுயபரிசோதனையையும் செய்து கொள்ள தயாராக இருப்பவர்கள் இதே போன்ற வெற்றிகளும் கொண்டாடுதலும் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும். வாழ்த்துகள் அஷுதோஷ்