பா.ஜ.க சார்பில் தேசியக் கல்வி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,
“தி.மு.க வரும் 2026-ம் வருடச் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் உள்ளார்கள். தி.மு.க-வினர் யாரும் கும்மிடிப்பூண்டியைக்கூடத் தாண்டியது கிடையாது.
வட இந்தியர்கள் யாரும் தமிழர்களை இழிவாகப் பேசியதில்லை. ஆனால், தி.மு.க-வினர் வட மாநில மக்களை இழிவாகப் பேசுகிறார்கள். அதற்குக் காரணம் பயம்.
இந்தியாவில் உள்ள முதல் இரண்டு கல்விக் கொள்கையிலும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மோடி மாற்றி ஏதாவது ஒரு மொழி படிக்க வேண்டும் எனக் கொண்டு வந்தார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக 26 லட்சம் பேர் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். தி.மு.க-வினர் நடத்திய கையெழுத்து இயக்கங்கள் என்ன ஆனது என்பதே தெரியவில்லை

பா.ஜ.க நடத்திய கையெழுத்து இயக்கம் அரசியல் புரட்சி. தி.மு.க-வினர் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை.
உதயநிதி எங்குப் படித்தார்… என்ன படித்தார் என்பது யாருக்கும் தெரியாது. உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர்தான் இன்று கல்வி அமைச்சர்.
காந்தி என்கிற அமைச்சர் கள்ளச்சாராய வழக்கில் கைதாகிச் சிறைக்குச் சென்று வந்தவர். செந்தில் பாலாஜி, சேகர் பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன.
இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் தமிழகத்தின் கல்விக் கொள்கை குறித்துப் பேசுகிறார்கள்.
மோடி, நம் குழந்தைகளை உலகத் தரத்திலான குழந்தைகளாக உயர்த்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்தாலும், தனியார்ப் பள்ளியில் படித்தாலும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டும் என முயற்சி செய்கிறார்.
மழைக்குக்கூடப் பள்ளிக்கு ஒதுங்காதவர்கள்தான் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை 1 முதல் 5-ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் மொழி படிக்க வேண்டும்.
இதை தி.மு.க தலைவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்பது மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது.
புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 26 ,10,033 பேர்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். வரும் மார்ச் 5-ம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் மே மாதத்திற்குள் 1 கோடி பேர் கையெழுத்துப் போட்டு இருக்க வேண்டும்.
திருச்சியில் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்னும் 8 இடங்களில் கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க 8- வது கூட்டம் முடியும் போது 1 கோடி தாண்டி 2 கோடி பேர்களை நோக்கி கையெழுத்து இயக்கத்தை நிச்சயமாகக் கொண்டு செல்வோம்.
புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் கல்வித் திறமை அதிகரிக்கும். அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வந்தால், உலகம் தர வாய்ந்த மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் தரம் இல்லை. தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் மும்மொழி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை நடத்துகிறார்கள்.

ஆனால், ஏழை மக்களின் குழந்தைகள் படிக்கக் கூடாது எனக் கருதுகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டைக் கடந்து போனால், இரண்டு பேர்களைக் கூட கூட்டிக்கொண்டு போவார்.
ஏன் என்றால் அவர்கள் பேசுவது இவருக்குத் தெரியாது. இவர் பேசுவது அவர்களுக்குத் தெரியாது. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
மொழி தெரியாமல் பேசிய கூட்டம். தி.மு.க விழாவா, குடும்ப விழாவா என்பது தெரியவில்லை. தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள்.
முட்டாள்களாக இருக்கிறார்கள் தி.மு.க-வினர். வேலையில்லாத முதல்வர்கள் ஒன்றிணைந்து கூட்டம் போட்டுள்ளனர்.
திருச்சியில் மும்மொழிக்கு ஆதரவாகக் கூட்டம் போடுவதற்கு அனுமதி இல்லை. நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கும் சூழ்நிலை உள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மட்டும் 1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதுவரை 9 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கனவு காண்கிறார்கள். அனைவரையும் மனநல மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களில் முதல்வர் புகைப்படம் உள்ளது. ஆகையால், பா.ஜ.க மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகளில் அப்பா படத்தை வைத்ததிற்கு அவர்களில் 92 பேர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த 92 மகளிர்களுக்கும் வீரமங்கையர் என அடைமொழி கொடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பெயர் வீரமங்கையர் என அடைமொழியோடுதான் அழைக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையில், அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தபோது கூட்டம் கலைந்ததாக அங்கிருந்த காலி சேர்களை தினப் பத்திரிகை போட்டோகிராபர் ஒருவர் போட்டோ எடுத்தபோது, அங்கிருந்த பா.ஜ.க-வினர் அவரது செல்போனை பறித்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்போது, அதைக் தட்டிக் கேட்ட டி.வி செய்தியாளர் ஒருவரைத் தாக்கியதாகச் சொல்கிறார்கள். அந்த தாக்குதலில் தினப் பத்திரிகை புகைப்படக்காரருக்குச் சட்டை கிழிந்ததாகச் சொல்லப்படுகிறது.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks