`குறிப்பிட்ட பணியில் இணைய, தேவையான தகுதி என பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிகம் கற்ற நபரை அவரது கல்வித்தகுதியை மட்டுமே காரணமாக காட்டி பணியில் இணைக்காமல் நிராகரிக்க கூடாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு அதிகாரி (FSO) பணி
நுண்ணுயிரியல், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளான சந்திரசேகர் மற்றும் ஏனையோர் ‘உணவு பாதுகாப்பு அதிகாரி’ பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், ஆள்சேர்ப்பு விளம்பரத்தில் பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியோடு விண்ணப்பதாரரின் கல்வித்தகுதிகள் பொருந்தவில்லை, கூடுதலாக உள்ளது என காரணம் கூறி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம், விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
குறிப்பிட்ட பாடங்களில் இளங்கலை பட்டதாரிகள் பணிக்கு தேவை என ஆள்சேர்ப்பு விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளதால், நுண்ணுயிரியல் அல்லது உணவு அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றோர் ‘உணவு பாதுகாப்பு அதிகாரி’ பணிக்கு தகுதியற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
உயர்நீதிமன்ற தீர்ப்பால் அதிருப்தி அடைந்த சந்திரசேகர் மற்றும் ஏனையோர், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மெஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
`பட்டம்’ என்ற சொல்லுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்
“ஆள்சேர்ப்பு விளம்பரங்களில் குறிப்பிடப்படும் ‘பட்டம்’ என்ற சொல்லுக்குள், வெளிப்படையாக பணியிலிருந்து விலக்கப்பட்ட பட்டதாரிகளை தவிர இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளும் உள்ளடங்குவர்” என நீதிபதி மெஹ்தா தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம், 1956 இன் பிரிவு 22(3) இல் ‘பட்டம்’ என்ற சொல் வரையறுக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குறிப்பாக ஏதேனும் விலக்கு இல்லாதபோது, ‘பட்டம்’ என்ற சொல்லுக்குள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் என்ற மூன்று நிலைப் பட்டங்களும் உள்ளடங்கும் என்ற யுஜிசி சட்டத்தின் பிரிவு 22(3) ஐ வலியுறுத்தியது உச்சநீதிமன்றம்.

`கூடுதல் தகுதி நிராகரிப்பு இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது’
மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், “உணவு பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு ‘வேதியியல்’ பாடத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டோர் விண்ணப்பிக்க விரும்பினால், அவர் அப்பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என முடிவு செய்வதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால், விண்ணப்பதாரர் தனது கல்லூரிக் கல்வியில் உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், எண்ணெய் தொழில்நுட்பம், விவசாய அறிவியல், கால்நடை அறிவியல், உயிர்வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் போன்ற உணவுத்துறை சார்ந்த பாடங்களை கற்றிருந்தால் அவர் ‘உணவு பாதுகாப்பு அதிகாரி’ பதவிக்கு தகுதியானவராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதாவது, குறிப்பிட்டுள்ள துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை, முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றிருப்போரை, ‘உணவு பாதுகாப்பு அதிகாரி’ பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், இந்த பாடங்களில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளதில் எவ்வித நியாயமும் இல்லை மற்றும் இந்த நிராகரிப்பு இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது” என தெரிவித்துள்ளது.
பர்வைஸ் அஹ்மத் பாரி எதிர். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் (2015) 17 SCC 709, என்ற வழக்கை குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், குறைந்த தகுதியான இளங்கலைப் பட்டதாரிகளை ஏற்றுக்கொள்ளும் போது, உயர்தகுதியான முதுகலைப் பட்டதாரிகளை கல்வித்தகுதியை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தியது.
உணவு பாதுகாப்பு அதிகாரி’ பதவிக்கான தகுதிகளை பரிந்துரைக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரமுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஜார்கண்ட் மாநிலத்திற்கு எந்த அதிகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேல்முறையீட்டை அனுமதித்த உச்சநீதிமன்றம், நுண்ணுயிரியல் மற்றும் உணவு அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற மேல்முறையீட்டாளர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு தகுதி பெற்றவர்கள் என கூறியது.

மேலும், நேர்காணல் வரை தேர்வு செய்யப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணல் நிலையிலிருந்தே பணியில் நியமனம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில், மேல்முறையீட்டாளர்களுக்கு பணியளிக்க சூப்பர்நியூமரரி பணியிடங்களை உருவாக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
