சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்டவை அடிப்படையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட கட்டமைப்பை நிறுவுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்டவை தொடர்பாகவும், அடுக்குமாடி கட்டிட பகுதிகளில் புதிய வாக்குச் சாவடி மையங்கள் அமைத்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பிரதிவிராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், எம்.பி.அமித், கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ரா.பானுகோபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.