கோவை: கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக இன்று (மார்ச்.25) கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால், தொப்பி அணிந்து அல்லது குடைபிடித்து கொண்டும், காலணி அணிந்தும் செல்ல வேண்டும். வெளிர்ந்த நிறமுடைய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்த வேண்டும்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசிப் பழங்கள், வெள்ளரி போன்றவற்றை உட்கொள்ளலாம். எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் காற்றோட்டம் நிறைந்த மற்றும் குளிர்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும். வீட்டின் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். மின்விசிறியை பயன்படுத்த வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் நிழலான இடங்களில் வேலை செய்ய வேண்டும். வெயிலில் வேலை செய்யும் இடங்களில் தற்காலிக கூடாரங்களை அமைப்பதன் மூலம் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். கடினமான, திறந்தவெளியில் செய்யும் வேலைகளை வெயில் குறைவாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதித்து சிகிச்சை எடு்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலத்தில், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேநீர், காபி, மது, கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழிப்பை ஏற்படுத்தும்.
வெயில் நேரங்களில் திறந்தவெளியில் விளையாடுவதையும், இறுக்கமான ஆடைகளை அணிவதையும், குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், கதவு அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்ப நிலை அபாயகரமான நிலையில் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.