சென்னை: அறிவியல் கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கங்களுடன் பிரம்மாண்டமான சென்னை அறிவியல் விழா இன்று (25-ம் தேதி) தொடங்குகிறது. இதில் அறிவியல் கருத்துகளை விவரிக்கும் வகையில் பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசின் அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உயர்கல்வித் துறையின் ஓர் அங்கமாக இயங்கிவரும் அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதில் முக்கிய நிகழ்வான சென்னை அறிவியல் விழா கடந்த 2008-ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இந்திய மருத்துவ இயக்குநரகம், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட தலைசிறந்து விளங்கும் நிறுவனங்கள் பங்கேற்று அறிவியல் படைப்புகளை பொதுமக்களின் காட்சிக்கு வைக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சென்னை அறிவியல் விழா சென்னை கிண்டி பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) இன்று (25-ம் தேதி) தொடங்கி 28-ம் தேதி வரை தினமும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. இதில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி அரங்குகள், அறிவியல் செய்முறை விளக்கங்கள், அறிவியல் கருத்துகளை பொதுமக்களிடையே எடுத்துச்செல்லும் வகையில் பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.