ஐக்கிய நாடுகள் சபை: ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் வெளிப்படையான விவாதத்தின் போது ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் நேற்று எழுப்பியது. இது தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாரிக் ஃபடாமி, “இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது என்ற தனது தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு அவை நிறைவேற்ற வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி கிடையாது. ஐநாவின் அதிகாரபூர்வ வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
பாகிஸ்தானின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ், “ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, எப்போதும் இருக்கும். ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது, அதை அது உடனடியாக காலி செய்ய வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்திருப்பதை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுபோன்ற தொடர்ச்சியான உரைகள், காஷ்மீர் தங்கள் பகுதி எனும் அவர்களின் சட்டவிரோத உரிமை கோரல்களை உறுதிப்படுத்தாது. மேலும், பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்தாது.
இந்த மன்றத்தின் கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான், தனது குறுகிய மற்றும் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.” என்று தெரிவித்தார்.