ஆம் ஆத்மி ஆட்சி குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை: டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

ஆம் ஆத்மி ஆட்சி குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த பிப்ரவரி 20-ம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.

இதைத் தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் டெல்லி போக்குவரத்து கழகம் தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையை முதல்வர் ரேகா குப்தா அவையில் தாக்கல் செய்தார்.

சிஏஜி அறிக்கை குறித்து பாஜக எம்எல்ஏ ஹரிஷ் குரானா பேசும்போது, “டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தில் (டிடிசி) சார்பில் 4,344 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை 3,937 ஆக குறைந்தது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு முன்பாக டிடிசியின் ஆண்டு வருவாய் ரூ.914 கோடியாக இருந்தது. ஆம் ஆத்மி ஆட்சியில் டிடிசியின் ஆண்டு வருவாய் ரூ.558 கோடியாக குறைந்தது” என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசும்போது, “கடந்த ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. ஏற்கெனவே டெல்லி மதுபான கொள்கை தொடர்பான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது டிடிசி குறித்த சிஏஜி அறிக்கை அவையில் தாக்கல்செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்து பல்வேறு துறைகள் தொடர்பான சிஏஜி அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். கடந்த ஆம் ஆத்மி ஆட்சி குறித்து விரிவான வெள்ளை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும். குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்குவது தொடர்பான விரிவான அறிவிப்பு இடம்பெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 28-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.