IPL 2025, CSK vs RCB: ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இன்று நடைபெறும் 5வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியுடன் 10 அணிகளும் அதன் முதல் போட்டியை விளையாடிவிடும் எனலாம்.
CSK vs RCB: சென்னை – பெங்களூரு அணிகள் மோதல்
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்தது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியையும் ருசித்துவிட்டது. அதை தொடர்ந்து, 2வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரும் வெள்ளிக்கிழமை அன்று (மார்ச் 28) சந்திக்கிறது.
CSK vs RCB: ஆர்சிபியை பழிதீர்க்குமா சிஎஸ்கே?
கடந்தாண்டு பெங்களூரு அணியுடன் அடைந்த தோல்வியின் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. இதன் காரணமாக, ஆர்சிபியை கடந்தாண்டுக்கு பழிவாங்கும் விதமாக சிஎஸ்கே களமிறங்கும் எனலாம். கடந்த 2008ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி சேப்பாக்கத்தில் வீழ்த்தியது. அதன்பின் இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றிபெறவில்லை.
CSK vs RCB: பலமாக இருக்கும் ஆர்சிபி
இந்த சாதனையை முறியடிக்க ஆர்சிபியும், இந்த சாதனையை தொடர சிஎஸ்கேவும் முனைப்பு காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போதைய நிலையில், சிஎஸ்கேவை விட ஆர்சிபி அணியே பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சில் வலுவாக இருக்கிறது. மறுபுறம், சிஎஸ்கே சுழற்பந்துவீச்சு பிரிவில் மட்டுமே ஆர்சிபியை விட சற்று பலமாக இருக்கிறது. இருப்பினும் ஆர்சிபியிடம் கூட லியம் லிவிங்ஸ்டன், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா என்ற நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
CSK vs RCB: புவனேஷ்வர் குமார் வந்தால் இன்னும் சிக்கல் தான்…!!
இவர்களுடன் ஹேஸல்வுட், யஷ் தயாள் உள்ளிட்டோரும் தாக்குதல் தொடுக்க காத்திருக்கின்றனர். ரஷித் தர் சலாம் ஒருபுறம் இருக்கிறார். மறுபுறம் புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, புவனேஷ்வர் குமார் உடற்தகுதியை பெற்றுவிட்டால் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு பெரிய பிரச்னை காத்திருக்கிறது எனலாம். எனவே, சிஎஸ்கே அணி அதன் பேட்டிங் ஆர்டரை பலப்படுத்த வேண்டும்.
CSK vs RCB: டெவான் கான்வே நிச்சயம் விளையாட வேண்டும்!
அந்த வகையில், டெவான் கான்வேவை போட்டியில் சேர்க்க வேண்டும் என பலரும் கூறுகிறார்கள். கேப்டன் ருதுராஜ் நம்பர் 3இல் விளையாட நினைக்கிறார் என்றால் ரச்சின் மற்றும் கான்வே ஆகியோரே ஓப்பனர்களாக இறங்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். திரிபாதி, ஹூடா ஆகியோரை நீக்கிவிட்டு மிடில் ஆர்டரில் விஜய் சங்கரை கொண்டுவரலாம். அவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். சேப்பாக்கமும் அவருக்கு பழக்கப்பட்டதாகும்.
CSK vs RCB: சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஆப்ஷன்கள்
எனவே, ராகுல் திரிபாதி, ஹூடா இருவரையும் நீக்கிவிட்டு விஜய் சங்கர், அன்ஷூல் கம்போஜ் ஆகியோரை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால், நாதன் எல்லிஸிற்கு அணியில் இடம் கிடைக்காது. இந்த மாற்றங்களுக்கு பிறகு பேட்டிங் ஆர்டரை பார்த்தால் டெவான் கான்வே, ரச்சின், ருதுராஜ், தூபே, விஜய் சங்கர், சாம் கரன், ஜடேஜா, தோனி, அஸ்வின் என 9வது நம்பர் வரை பேட்டிங் இருக்கும். பந்துவீச்சில் நூர் அமகது, அன்சுல் கம்போஜ் சேர்க்கலாம். இம்பாக்ட் வீரராக கலீல் அமகதை வைத்துக்கொள்ளலாம்.
CSK vs RCB: சாம் கரன் தேவையில்லாத ஆணி…!
மேலும், சாம் கரன் பந்துவீச்சும் மோசமாக இருக்கிறது. அவர் பேட்டிங்கில் கைக்கொடுக்கும் வாய்ப்பு குறைவு என்றால் அவருக்கு பதில் நாதன் எல்லிஸை சேர்க்கலாம். வேண்டுமென்றால், அன்ஷூலை சேர்க்காமல் திரிபாதி அல்லது ஹூடாவை பிளேயிங் லெவனில் வைத்துக்கொள்ளலாம். இந்த காம்பினேஷன்களே சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சை சமநிலைக்கு கொண்டுவருகிறது. மூன்றாவது காம்பினேஷனும் இருக்கிறது, அதை கீழே பார்ப்போம். ஆனால் மாற்றம் வந்தால்தான் அணி பலம் பெறும்.
CSK vs RCB: செய்வாரா ருதுராஜ் கெய்க்வாட்?
சிஎஸ்கே பெரிதாக பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாது என்பது தோனியின் காலம். தற்போது ருதுராஜ் இது செய்வாரா அல்லது தோனி பாணியையே தொடர்வாரா என்பதை பொறுத்திருந்திருந்து பார்ப்போம்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் காம்பினேஷன்கள்
காம்பினேஷன் 1: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, விஜய் சங்கர், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிசந்திரன் அஸ்வின், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ். இம்பாக்ட் வீரர்: கலீல் அகமது.
காம்பினேஷன் 2: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, விஜய் சங்கர், ஹூடா, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிசந்திரன் அஸ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ். இம்பாக்ட் வீரர்: கலீல் அகமது.
காம்பினேஷன் 3: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, விஜய் சங்கர், ஜேமீ ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிசந்திரன் அஸ்வின், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ். இம்பாக்ட் வீரர்: கலீல் அகமது.