புதுடெல்லி: இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதப் பிரச்சினையை முழுமையாகக் கையாள்வதற்காக, “இடதுசாரி தீவிரவாதத்திற்கு தீர்வு காண்பதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்” 2015-ல் அங்கீகரிக்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், வளர்ச்சி நடவடிக்கைகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைத்தகுதிகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்திகளை இது செயல்படுத்துகிறது. பாதுகாப்பைப் பொறுத்து இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசுக்கு மத்திய ஆயுத காவல் படை பட்டாலியன்கள், பயிற்சி, மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கலுக்கான நிதி, உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள், உளவுத்துறை பகிர்வு, பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்கள் கட்டுதல் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மத்திய அரசு உதவுகிறது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தக் கொள்கை வகை செய்கிறது. இந்த முயற்சியில், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் சிறப்பு உந்துதலுடன் மத்திய அரசு பல்வேறு குறிப்பிட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ் 17,589 கி.மீ. நீள சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14,618 கி.மீ. நீள சாலைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பை மேம்படுத்த 10,505 செல்போன் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 7,768 செல்போன் கோபுரங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
திறன் மேம்பாட்டுக்காக, 48 தொழிற்பயிற்சி மையங்கள் (ஐ.டி.ஐ) மற்றும் 61 திறன் மேம்பாட்டு மையங்கள் (எஸ்.டி.சி) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 46 தொழிற்பயிற்சி நிலையங்களும், 49 திறன் மேம்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
பழங்குடியினர் பகுதிகளில் தரமான கல்விக்காக 255 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவற்றில் 178 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவைகள் வழங்குவதற்காக 5,731 அஞ்சலகங்களை வங்கி சேவையுடன் அஞ்சல் துறை திறந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மாவட்டங்களில் 1007 வங்கிக் கிளைகள் மற்றும் 937 ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.