ஐதராபாத்,
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சன் ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 106 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 70 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் ஹர்ஷல் பட்டேல், சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், “எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீச எனக்கு விருப்பமில்லை. அவர்களது ஆட்டம் நம்ப முடியாத வகையில் உள்ளது. அது பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆட்டம் எதிரணி பவுலர்களுக்கு கடினமாக இருக்கும். இவ்வளவு பெரிய ரன்கள் குவிப்பது அணிக்கு வெற்றியைத் தேடி தரும். அதே சமயம் நீங்களும் எதிரணிக்கு நிறைய ரன்களை வாரி வழங்குவீர்கள்.
எங்களது முக்கிய வீரர்களை மீண்டும் தக்க வைக்க முடிந்ததில் மகிழ்ச்சி. சிலரை தவற விட்டாலும் அவர்களுக்கு பதிலாக வந்த வீரர்கள் சிறப்பானவர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக இஷான் கிஷன் அற்புதமாக விளையாடினார். நாங்கள் சுதந்திரமாக விளையாட முயற்சிக்கிறோம். எங்களது பயிற்சியாளர்கள் 3-4 வாரங்களாகவே இத்தொடருக்காக தயாராகி வந்தனர். எங்கள் வீரர்களுக்கு நாங்கள் சுதந்திரமாக விளையாடும் ஆதரவைக் கொடுக்கிறோம். அது சொல்வதை விட செய்வது கடினம். ஆனால் எங்களுடைய வீரர்கள் இந்த வருடம் முழுவதும் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான புளூ பிரிண்டை உருவாக்கியுள்ளோம்” என்று கூறினார்.