ஒன் பை டூ!

நாராயணன் திருப்பதி

“எங்கள் தலைவர் சொல்லியிருப்பது உண்மைதானே… இந்த தி.மு.க அரசு, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மக்களைக் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. மது விற்பனையில் இல்லாத பித்தலாட்டத்தையெல்லாம் செய்து, பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதையும் அமலாக்கத்துறை கண்டறிந்திருக்கிறது. இந்த ஊழல் அரசைக் கண்டித்து மக்களுக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறது பா.ஜ.க. அந்தப் போராட்டத்துக்குத் துணை வராத த.வெ.க., போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்விதமாகப் பேசுகிறது. இப்படிப் பேசுவதிலிருந்தே அந்தக் கட்சி, தி.மு.க-வின் ஊழல் குற்றங்களை மடைமாற்றவும், மீண்டும் தி.மு.க-வே ஆட்சியமைக்க மறைமுகமாக உதவுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சிதான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. மக்கள் பிரச்னைக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அதை விமர்சிப்பது அபத்தமானது. அதேபோல, தமிழகத்தில் த.வெ.க வளர்ந்திருக்கிறது என்று அவர்களைத் தவிர வேறு யாரும் சொல்லவில்லை. தேர்தலைச் சந்திக்காமல் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்பவர்களுக்கு மக்களின் வலியும் வேதனையும் எப்போதும் புரியாது!”

ராஜ்மோகன்

“கண்ணியமும் நிதானமும் தவறிப் பேசுகிறார் அண்ணாமலை. அரசியலுக்கு வரும்போதே எங்களின் கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டோம். தமிழக வெற்றிக் கழகம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்துவருகிறது. இந்த நிலையில், ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச அரசியல் அறத்தோடு பேச வேண்டும் அண்ணாமலை. ‘இடுப்பைக் கிள்ளுவது’ என்று ஒரு துறையையே கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அவர் கட்சியிலுள்ள ஹேமாமாலினி, கங்கனா ரனாவத் தொடங்கி நடுராத்திரியில் யோசனை தோன்றி பா.ஜ.க-வில் இணைந்த சரத்குமார் வரையிலாக, சினிமா நடிகர்கள் பலரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே எங்களைப் பற்றிப் பேசுகிறார் அண்ணாமலை. `டி.எம்.கே ஃபைல்ஸ்’ தொடங்கி டாஸ்மாக் ஊழல் போராட்டம் வரை தி.மு.க-வுக்கு எதிராக வாய்கிழியப் பேசுவார். ஆனால், அடுத்த வாரத்திலேயே அந்தக் குற்றச்சாட்டு அனைத்துமே காணாமல்போய்விட்டதுபோல நடந்துகொள்வார். உண்மையில், தி.மு.க-வும் பா.ஜ.க-வும்தான் கள்ளக் கூட்டணி அமைத்துக்கொண்டு நாடகமாடி மக்களை ஏமாற்றிவருகின்றன!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.