பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மனைவி என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாதவர் ராப்ரி தேவி என விமர்சித்த நிதிஷ் குமார், கட்சி உங்களுடையது அல்ல உங்கள் கணவருடையது என கூறி அவரை கண்டித்தார்.
பிஹார் சட்ட மேலவையில் இன்று (மார்ச் 25) ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ஆர்ஜேடி எம்எல்சி-க்கள் தங்கள் கட்சிக் கொடியின் நிறமான பச்சை நிறத்தில் பேட்ஜ்களை அணிந்து அவைக்கு வந்தனர். பிஹாரில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடுகளை ‘தேஜஸ்வி அரசாங்கம்’ உயர்த்தியது என்றும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அது ‘திருடப்பட்டது’ என்றும் தெரிவிக்கும் வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தபோது 2023 ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்றப்பட்டது. எனினும், அந்த சட்டம் பல மாதங்களுக்குப் பிறகு பாட்னா உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
ஆர்ஜேடி உறுப்பினர்களின் வாசகத்தால் கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், இந்த சட்டம் தான் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது என்றும், ஆர்ஜேடி அதன் பெருமையை திருட முயல்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி எழுந்தார். அப்போது, “நீங்கள் இதிலிருந்து விலகி இருங்கள். கட்சி உங்களுடையது அல்ல, உங்கள் கணவருடையது” என்று கூறி நிதிஷ் குமார் அவரை கடிந்து கொண்டார். மேலும், லாலு பிரசாத் யாதவின் மனைவி என்பதைத் தவிர வேறு எந்த சிறப்பும் இல்லாதவர் ராப்ரி தேவி என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ஜேடி உறுப்பினர்கள், நிதிஷ் குமார் சமநிலையை இழந்துவிட்டார் என்றும், மாநிலத்தை ஆளும் தகுதியை இழந்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டினர். பின்னர், ஆர்ஜேடி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தின் படிக்கட்டுகளில் தர்ணாவில் ஈடுபட்டனர்.