காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஏப். 1-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் 32 காலாவதியான சுங்கச்சாவடிகள் இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக் கட்டணமாக ரூ.40 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதியையும் அண்மையில் மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இங்கு பராமரிப்புப் பணிகள் நடப்பதில்லை, அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. ஆனால், காலாவதியான சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் வரும் 1-ம் தேதிமுதல் மீண்டும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து சென்னை, வானகரம் சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு, நாடாளுமன்ற மறுவரையறை விவகாரங்களில் செலுத்திய கவனத்தை சுங்கச்சாவடி விவகாரத்திலும் தமிழக அரசு செலுத்தி, மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்: சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, கட்டண உயர்வை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுங்கச்சாவடி உயர்வைத் தவிர்க்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.