புதுடெல்லி: அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு கூட்டணியில் இருந்து 2 அமைப்புகள் விலகி உள்ளன. இது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு’ என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், பிரிவினைவாத அமைப்புகள் இணைந்தன.
இந்த கூட்டணி காஷ்மீர் முழுவதும் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகளை ஊக்குவித்தது. பாகிஸ்தானின் பினாமியாக செயல்பட்டு வந்தது.
கடந்த 2016 முதல் 2018 வரை காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது ஹுரியத் மாநாடு கூட்டணியின் பிரிவினைவாத தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டது.
அப்போதைய முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, பாஜகவின் முயற்சிகளை தடுத்தார். இதன் காரணமாக கூட்டணி உடைந்து, ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. அப்போது ஹுரியத் மாநாடு கூட்டணியின் மூத்த தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். தீவிரவாத அமைப்புகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று, அந்த கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார். தற்போது காஷ்மீரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஹுரியத் மாநாடு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் ஹுரியத் மாநாடு கூட்டணியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் மற்றும் ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய இரு அமைப்புகள் விலகி உள்ளன. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைளால் ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டு உள்ளது. இரு அமைப்புகள் ஹுரியத் உடனான உறவை முறித்து உள்ளன.
இதை முழுமனதுடன் வரவேற்கிறேன். பாரதத்தின் ஒற்றுமை ஓங்கி வளர்கிறது. வளம், செழுமை, அமைதி, ஒன்றிணைந்த பாரதத்தை கட்டி எழுப்புவது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை ஆகும். தற்போது அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.