பாஜக தொண்டர் சூரஜ் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், முழப்பிலங்காடு நகரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்தார். கடந்த 2003-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்து அந்த கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாக உழைத்தார்.
இதன்காரணமாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் சூரஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலையில் முழப்பிலங்காடு கடற்கரை பகுதியில் சூரஜ் நடைபயிற்சி சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் சூரஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சம்சுதீன், ரவீந்திரன் ஆகிய 2 பேர் வழக்கு விசாரணையின்போது உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 10 பேர் மீது தலச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. 28 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 51 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் கடந்த 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பத்து பேரில் நாதன்கோட்டா பிரகாசன் என்பவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதர 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மனோராஜ், ரஜ்னீஷ், யோகேஷ், ஜித்து, சஞ்சீவன், பிரபாகரன், பத்மநாபன், ராதாகிருஷ்ணன் ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிரதீபன் என்பவருக்கு மட்டும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஊடக பிரிவு செயலாளராக மனோஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் அவரது சகோதரர் மனோராஜும் ஒருவர் ஆவார்.