கோவை: கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரிப்பனவருடன் இன்று விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் சந்தித்து பேசினர்.
கூலி உயர்வு தொடர்பாக விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்தார். இன்று காலை கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிளியப்பனவருடன் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.
இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பூபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி கூடங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் வரை கூலி உயர்வு வழங்குவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து மூன்று மாதங்கள் மட்டும் அவர்கள் ஒப்புக்கொண்ட கூலி தொகை வழங்கப்பட்டது. அதற்கு பின் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட கூலி உயர்வு அடிப்படையில் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய சூழலில் மின் கட்டணம் மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கெனவே தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கூலி உயர்வு தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இதனால் ஒரு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ. 200 கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியுள்ளது.இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியருடன் நடந்த சந்திப்பில் எங்களது தரப்பு கோரிக்கைகளை தெரிவித்தோம். 60 சதவீதம் கூலி உயர்வு வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஆட்சியர் கலந்துரையாட உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.