புதுடெல்லி: மத்திய அரசின் அழைப்பின் பேரில் சண்டிகர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க தலைவர்களை பகவந்த் மான் அரசு கைது செய்தது சட்ட விரோதமானது என சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி .ஆர் .பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பஞ்சாப் மாநிலம், கணோரி பார்டரிலும், ஷம்பு எல்லையிலும் கடந்த 2024 பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்என்பி) சார்பில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஹரியானா மாநில அரசு, விவசாயிகள் டெல்லி செல்லும் சாலைகளை அடைத்து சுவர் எழுப்பி தடுத்து வைத்திருந்தது. இந்த நிலையில் நீதியரசர் நவாப்சிங் தலைமையிலான குழு அறிக்கையையும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெகதீப்சிங் டல்லேவால் கடந்த 2024 நவம்பர் 26 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தியது. அதனை மறுத்த டல்லேவால் மருத்துவ சிகிச்சைக்கும் குடிதண்ணீர் அருந்துவதற்கும் ஒப்புதல் கொடுத்தார். இரண்டு முறை மத்திய அமைச்சர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். தொடர்ந்து மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை கடந்த 19 ஆம் தேதி சண்டிகரில் நடத்துவதற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று ஜெகதீப்சிங் டல்லேவால், கிசான் மஜ்தூர் மோர்சா தலைவர் ஷர்வன் பந்தேர் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தையில் தமிழகம் சார்பில் நான் (பிஆர் பாண்டியன்), கேரளா சார்பில் பி.டி. ஜான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றோம்.
மத்திய அமைச்சர்களில், விவசாயத்துறையின் சிவராஜ் சிங் சவுகான், வர்த்தகத்துறையின் பியூஸ் கோயல், மற்றும் இணை அமைச்சர் பிரகலாத்ஜோஷி ஆகிய மூன்று பேர் குழு பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் அடுத்த கூட்டத்தை மே 4ஆம் தேதி நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. விவசாயிகளை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள வர்த்தகர்களிடமும் கருத்து கேட்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து விவசாய சங்க தலைவர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியில் வந்த போது, விவசாய சங்க தலைவர்களை பஞ்சாப் மாநில பக்வந்த் மான் அரசு அரசு கைது செய்து பாட்டியாலா சிறையில் அடைத்துள்ளது.
மத்திய அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்ற தலைவர்களை பக்வந்த் மான் அரசு பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக கைது செய்தது சட்ட விரோதமானது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
பகவந்த் மான் அரசு பெருநிறுவனங்களுக்கு ஆதரவான வகையில் செயல்படுகின்றது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் விவசாயிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக போராட்டத்தை தீவிர படுத்தி உள்ளார்கள். விவசாயிகளை பழிவாங்கும் நோக்கோடு ஆம் ஆத்மி தலைமையிலான பகவந்த மான் ஆட்சி கைது நடவடிக்கை என்பது மனிதநேயமற்ற செயல்.
மத்திய அரசு இதுகுறித்து பஞ்சால் மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும். மே 4ம் தேதி கூட்டத்திற்கு முன்னதாக கைது நடவடிக்கை எடுத்த பகவான் அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து தலைவர்களையும் நிபந்தனை இன்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஜெகதீப் சிங் டல்லேவால் 120 நாட்களைக் கடந்து மருத்துவ சிகிச்சையை மறுத்துவிட்டு குடிநீரையும் அருந்தாமல் ஒரு வார காலமாக உயிருக்கு போராடி வருகிறார்.
அவரது உயிருக்கு பகவந்த்மான் அரசு பொறுப்பேற்க வேண்டும்.அவரை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். பஞ்சாப் அரசு விவசாயிகளை விடுவிக்க மறுத்தால் இந்தியா முழுமையிலும் போராட்டத்தை தீவிர படுத்துவோம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.