வாக்காளர் பட்டியிலில் இறந்தவர் பெயரை நீக்குதல், ஒருவது பெயரே 2 முறை இடம் பெறுவது போன்ற தவறுகள் இல்லாமல், 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “அரசியல் கட்சிகளிடம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைப் பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாக்காளர் பட்டியல் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தலைமைச் செயலகத்தில், ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் என 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.பாரதி (திமுக) : பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தவர்களின் பெயர்கள் எல்லாம் தொடர்ந்து வாக்களர் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. அதேபோல இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களும் ஒவ்வொரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 20 சதவீதமாவது இருக்கிறது. வாக்காளர் பட்டியலை சீரமைப்பதன் மூலம் தேர்தலின்போது வாக்காளரின் பெயர் இல்லாததால் ஏற்படும் குழப்பங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.
டி.ஜெயக்குமார் (அதிமுக): வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் தொடர்கின்றன. இறந்தவர்களின் பட்டியலை பெற்று, அதனை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். பூத் சிலிப் வீடுகளுக்கு சரியாக விநியோகிக்கப்படுவதில்லை.
கரு.நாகராஜன் (பாஜக): தேர்தலின்போது நகர்ப்புறங்களில் வாக்குசதவீதம் குறைகிறது. வார வேலை நாட்களில் வாக்குப் பதிவை வைக்க வைக்க வேண்டும். இறுதி வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக நீக்கப்பட்ட பெயர் பட்டியலையும் வெளியிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் பேர்களை சேர்க்க வேண்டும்.
ஏ.பி.சூர்ய பிரகாசம் (காங்கிரஸ்): தேர்தல் ஆணையத்தின் தகவல் தொகுப்புடன், பொதுமக்களின் ஆதார் எண்ணை இணைத்தால், ஒருவர் 18 வயது ஆனவுடன் அவருக்கு தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். அதேபோல், பிறப்பு, இறப்பு ஆவணங்களின் மூலம் ஒரு வாக்காளர் இறந்தால், அவரது பெயரை தானாகவே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
ந.பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்): வாக்காளர் பட்டியலை தவறுகள் இல்லாமல் வெளிப்படையாக தயாரிக்க வாக்காளர் பதிவு அதிகாரி அதிகாரம் கொண்டவராக நியமிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் திருத்தங்களை ஊராட்சி மன்றங்கள், வாக்குச்சாவடி மையங்கள், மாநகர மன்ற அலுவலகங்களிலும் மக்களின் பார்வையில் வைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளோம்.
பாலசிங்கம் (விசிக): வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவர் பெயர் நீக்கப்படும்போது, அதுகுறித்து அந்த நபருக்கு தெரிவிக்க வேண்டும். விவி பாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குச் சீட்டுகளை எண்ணிய பிறகுதான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். ஆணையமே வேட்பாளரின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்தில், தேமுதிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.